தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கூட்டம் மார்ச் 20-ம் தேதி முதல் கடந்த 21-ம் தேதி வரை நடந்தது. இதில் கடந்த 21-ம் தேதி தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சிகளும் திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்டவையும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழகத்தை நோக்கி வருகின்றன. தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மை வரவேண்டும் என்பதற்காக, இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. எந்த தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இது தொடர்பாக உயர்மட்ட குழு அமைக்கப்படும்" என்றார்.
பின்னர் திமுக கூட்டணிக் கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். அப்போது அவர்கள், "இது ஆலை முதலாளிகளுக்கான சட்டமாக இருக்கிறது. அனைத்து கூட்டணிக் கட்சிகளும் எதிர்த்து குரல் கொடுத்தோம். யார் மீதும் திணிக்கப்படாது என்கிறார்கள். ஆனால் உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவான சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியிருக்கிறது. தொழிற்சங்க உரிமையை நசுக்கும் சட்டம் பற்றி காலையிலேயே முதல்வரை சந்தித்து பேசினோம். முதல்வர் உறுதியளித்த பின்னரும் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்றனர்.
இதேபோல் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதையடுத்து "2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு' என்ற சட்டமுன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது அறிக்கையில், "தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் இச்சட்டத்தில் இருக்கிறது.
இருப்பினும் சில தொழிற்சங்கங்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து “2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டப்பேரவை சட்டமுன்வடிவு எண்.8/2023)”- என்ற சட்டமுன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் ஆய்வாளர் துரை கருணா, "கடுமையான போராட்டத்திற்கு பிறகு 8 மணி நேர வேலை என்பது அமலுக்கு வந்தது. திமுக தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று கூறிவிட்டு இந்த மசோதாவை கொண்டுவந்ததே அபத்தமானது.
கார்ப்பரேட், தனியார் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக இந்த நிலைப்பாட்டை திமுக எடுத்திருக்கிறது. இதனை கடந்த 2 ஆண்டுகளாக கைகட்டி வேடிக்கை பார்த்த, வாய்மூடி மவுனமாக இருந்த எதிர்க்கட்சிகளே குரல் கொடுத்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்கள். மேலும் போராட்டமும் அறிவித்தார்கள்.
அதன் பிறகு மேல்நடவடிக்கையை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ஒரு சட்டத்திருத்தம் சட்டசபையில் நிறைவேறி, சபாநாயகருக்கு கையெழுத்து போட்ட பிறகு தான் அது செயலுக்கு வரும். ஆனால் நிறைவேற்றப்பட்ட மசோதா என்பது அப்படியே தான் இருக்கும். எந்த நேரத்திலும் அதை கவர்னரின் ஒப்புதலுடன் பயன்படுத்தலாம்.
எனவே இவர்கள் மீண்டும் சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டி இதை ரத்து செய்வதற்கு ஒரு மசோதா கொண்டுவர வேண்டும். ஒட்டுமொத்தமாக ரத்து செய்தால் தான் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு வெற்றி கிடைத்ததாக இருக்கும். இதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
முன்னதாக கமல்ஹாசன், ``தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை என்கிற சட்ட முன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது எனும் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன். யார் சொல்கிறார்கள் என்பதை விட என்ன சொல்கிறார்கள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து மாற்றுத் தரப்பின் நியாயமான கருத்துக்களுக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து செயல்படுவது ஓர் ஆரோக்கியமான அரசின் அடையாளங்கள். முதல்வர் ஸ்டாலினை பாராட்டுகிறேன்.12 மணி நேர வேலை எனும் அறிவிப்பை நிரந்தரமாக ரத்து செய்ய ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.
செய்யுமா தமிழக அரசு?!
from India News https://ift.tt/HnIumdT
0 Comments