தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகளாக அங்கம் வகித்தாலும், இவ்விரு கட்சிகளுக்கான வார்த்தை போர்கள் தொடர்கதையாகவே இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் வார்த்தை போர் முற்றி கூட்டணியில் பிளவு ஏற்படுமா என்கிற அளவுக்கு நகர்ந்தாலும், டெல்லி மேலிடம் இரு தரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, தற்காலின ஒட்டு போடுகிறதே வைக்கிறதே தவிர முற்றுபுள்ளி வைத்ததாக தெரியவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க, இப்போது அதிமுக ஒற்றைத் தலைமையின் கீழ் வந்துள்ளது. ‘அதிமுக-வில் இருக்கும் உட்கட்சி பூசலை பயன்படுத்தி தமிழகத்தில் பாஜக வளர்கிறது’ என்கிற விமர்சனம் ஒரு பக்கம் வைக்க, ‘ஒரு கட்சியை அழித்துதான் நாங்கள் கட்சியை வளர்க்க வேண்டும் என்கிற அவசியமில்லை’ என பாஜக தரப்பில் பதிலும் கொடுக்கப்பட்டது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட குழப்பங்கள் அதிமுக-வை சுழன்றடிக்க, இப்போது அதற்கான ஓர் தீர்வை நோக்கி நகர்ந்திருக்கிறது. இது கூட்டணி கட்சியான பாஜக-வில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாஜக-வின் சீனியர்கள் சிலரிடம் பேசினோம். ``அதிமுக ஒற்றுமைக்காகதான் பாஜக-வும் தொடர்ந்து பேசி வந்தது. ஆனால், அவர்களுக்குள் இருக்கும் மோதல்களால் கட்சி பல்வேறு சிக்கல்களை சந்தித்தது. இன்று ஒற்றைத் தலைமையின் கீழ் வந்திருப்பது நல்ல விஷயம் தான். ஏனென்றால் டிசம்பர் 8-ம் தேதி சென்னை பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில், ‘அ.தி.மு.க-வுடன் கூட்டணி இல்லாமல் தனித்தே போட்டி...’ என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். ‘காலை எடப்பாடி வாழ்க... மாலை ஓ.பி.எஸ் வாழ்க... என்று சொல்லி கொண்டிருக்க முடியாது. அதிமுக-வுக்குள்ளேயே பிளவு ஏற்பட்டிருக்கும் நிலையில் யாருடன் கூட்டணி பற்றி பேசுவது’ என்று அதற்கான விளக்கத்தையும் அளித்தார்.
இதனை தொடர்ந்தே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போதும் ஒற்றைத் தலைமையின் கீழ் அதிமுக-வை கொண்டு வருவதற்கும், ஒன்றிணைக்கவும் முயற்சித்தோம். அதுவும் தோல்வியடைந்தது. இது போன்ற ஒரு சூழலில்தான் சமீபத்தில் அண்ணாமலை கூட்டணி குறித்து காட்டமாக பேசினார். இது டெல்லி தலைமை வரை செல்லவே... அங்கிருந்து சில அறிவுரைகளும் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே அதிமுக-வுடன் கூட்டணி தொடர்கிறது என்று எங்கள் கட்சியின் தலைவர்கள் சொல்ல ஆரம்பித்தனர். எங்களுக்கு எதிரி திமுக-தான். அதை எதிர்கொள்ளை எங்களுக்குள்ளும், எங்கள் கூட்டணியில் இருக்கும் உட்கட்சி மோதலையும் டெல்லி தலைமை ரசிக்கவில்லை. எனவே இதை சரிசெய்திருக்கிறது.
‘நாடாளுமன்ற தேர்தலுக்கான காலம் குறைவாகவே இருக்கிறது. கடைசி ஆறு மாதங்களுக்கு முன் வேலையை தொடங்குவதை விட, கர்நாடக தேர்தல் முடிந்த கையோடு ஒரு ஸ்டேட்டர்ஜி வகுத்தி தமிழ்நாட்டில் வேலை ஆரம்பிப்போம். இப்போதைக்கு தமிழ்நாட்டில் பாஜக ஒரு எம்.பி-யாவது பெற வேண்டும் என்றால் அது கூட்டணி வைத்தால் தான் முடியும்’ என்று உறுதியாக பிரதமர் மோடியிடம் ஆலோசித்திருக்கிறார் த.மா.க தலைவர் ஜி.கே.வாசன். எடப்பாடியின் நெருங்கிய வட்டத்துக்குள் இருக்கும் ஜி.கே.வாசன் பிரதமருடனும் இணக்கமாக இருப்பவர். இதற்கடுத்தே கூட்டணியில் எந்த ஒரு குழப்பமும் இல்லை என தேசிய தலைமை தெளிவுப்படுத்தியிருக்கிறது. ஒற்றைத் தலைமையின் கீழ் இயங்கும் அதிமுக-வுடன் இணைந்து வரும் நாடாளுமன்ற தேர்தலை பாஜக தமிழகத்தில் சந்திக்கும்” என்கிறார்கள்.
ஆனால், “அதிமுக கூட்டணி இல்லாமல் பாஜக தலைமையில்தான் ஒரு கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயராகிறார் அண்ணாமலை” என்கிறார் அரசியல் விமர்சகர் சாமானியர் நாகராஜ்.
மேலும் தொடர்ந்தவர், “அதிமுக தொடர்பான தீர்ப்பு இப்படிதான் வரும் என்று இரு வாரங்களுக்கு முன் கணித்தே அண்ணாமலை கூட்டணி குறித்து பேசினார். தீர்ப்பு வந்ததும் ஆட்டம் காட்டலாம் என்று அதிமுக நினைத்தார்கள். ஆனால், அண்ணாமலை அதற்கு இடம் தராமல் முந்தி கொண்டார். ஏனென்றால் இப்போது கூட்டணியில் அதிமுக இருந்தால் 10-க்கும் மேற்பட்ட இடங்கள் கேட்கும் இடத்தில் பாஜக இருக்கிறார்கள். அப்படி இல்லை என்றால் எடப்பாடி தனித்துவிட வாய்ப்புகள் அதிகம். வரும் அக்டோபர், நவம்பரில் கூட்டணிப் பேச்சுவார்த்தை துவங்கும் பொழுது, ஜெயலலிதா 2016-ல் தமிழிசையை கடைசி நிமிடம் வரை அலைக்கழித்தது போல் எடப்பாடியையும் பண்ண விடாமல் அண்ணாமலை ஒரு சூழலை உருவாக்கிவிட்டார். இதற்கு அண்ணாமலை யாருடன் ஆலோசனை செய்ய வேண்டுமோ அவருடன் ஆலோசனை செய்து விட்டுதான் இந்த எபிசோடை தொடங்கி இருக்கிறார். இந்த தொடரின் ஒவ்வொரு அப்டேட்களும் இனி வரும் நாள்களில் தெரியும்” என்கிறார்.
from India News https://ift.tt/7d5FO9w
0 Comments