அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஒ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஒற்றைத் தலைமை விவகாரம் பெரிய மோதலாக கடந்த ஆண்டு வெடித்தது. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர்கள் சி.வி சண்முகம், ஜெயக்குமார், ஆர்.பி உதயகுமார், கே.பி முனுசாமி உள்ளிட்ட பலரும் வலியுறுத்தினர். அதைத்தொடர்ந்து கடந்தாண்டு ஜூலை 11-ம் தேதி அ.தி.மு.க பொது குழு கூட்டப்பட்டது. அதில், ஒ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதை எதிர்த்த ஒ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் நீதிமன்றத்தில் ஒ,பன்னீர் செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது.
அதில், பொதுக்குழு செல்லும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளலாம் என தீர்ப்பளித்தது. அதனை தொடர்ந்து கடந்த 17-ம் தேதி, அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தல் அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் சம்மதம் இல்லாமல் நடத்தப்படுகிறது என ஒ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த இரண்டு வழக்குகளை நீதிபதி குமரேஷ் பாபு கடந்த 19-ம் தேதி விசாரித்தார். அப்போது பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தலாம். ஆனால் முடிவு அறிவிக்க கூடாது என்று அதிரடியாக உத்தரவிட்டார். மீண்டும் இந்த வழக்கை கடந்த 22-ம் தேதி நீதிபதி குமரேஷ் பாபு விசாரணை நடத்தினார். அப்போது இருதரப்பிலும் மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டி.குமரேஷ் பாபு தீர்ப்பை தேதி குறித்த குறிப்பிடாமல் ஒத்திவைத்து கடந்த 22-ம் தேதி உத்தரவிட்டார். இந்த நிலையில் இந்த வழக்குகளின் தீர்ப்பில், `கடந்த ஆண்டு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கையும், பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கையும் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த தீர்ப்பைத் தொடர்ந்து அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியிருக்கிறது.
தீர்ப்பை தொடர்ந்து, அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் பொதுச் செயலாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
from India News https://ift.tt/yduQN2V
0 Comments