பன்னீர் செல்வத்தின் பத்தாவது தோல்வி - அடுத்த மூவ் என்ன?!

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இன்று பொறுப்பேற்றுவிட்டார். இது பன்னீருக்கு அடுத்த தோல்வியாக பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூன் 23-ம் தேதி நடந்த பொதுக்குழுக்கு எதிராக தான், முதன் முதலில் நீதிமன்ற படிகளில் ஏறினார் பன்னீர். அன்றிலிருந்து இன்று வரை பலமுறை தோல்வியை சந்தித்து இருக்கிறார் பன்னீர். ஜூன் 23-ம் தேதி பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் தோல்வியடைந்தார் பன்னீர். பின்னர், புதிய தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என்று தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்றார். அதன்படி, நடந்த பொதுக்குழுவில் பன்னீர் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு நடந்தேறியது.

பன்னீர் - எடப்பாடி

இதையடுத்து, ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூடும் என்று எடப்பாடி தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து, பன்னீர் தரப்பு தொடுத்த வழக்கில், 'ஜூலை 11-ம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க-வின் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது பன்னீர் தரப்பின் 2-வது தோல்வியாகும்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு நடத்தப்பட்டு, அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த பொதுக் குழுவை எதிர்த்து பன்னீர் 4 முறை தனி நீதிபதியிடமும், 3 முறை டிவிஷன் பெஞ்சிலும் முறையிட்டு தோல்வி அடைந்திருக்கிறார்.

பன்னீர்செல்வம்

கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை எடப்பாடி தரப்பினர் மேற்கொண்டனர். அதன்படி, மார்ச் 26-ம் தேதி பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான வேட்புமனுவையும் எடப்பாடி தாக்கல் செய்தார்.

இதற்கிடையே, கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரியும் பன்னீர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் "பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும்” என அறிவித்து, பன்னீர் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது. அதன்படி, எடப்பாடி எதிராக நீதிமன்றத்தில் பன்னீர் பத்தாவது தோல்வி இதுவாகும்.

பன்னீர்செல்வம்

உயர் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பால், பன்னீர் தரப்பு கதிகலங்கி போய் நிற்கிறது. முன்னதாக, இந்த தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்ற எண்ணத்தில், மார்ச் மாதம் இறுதியில் நடக்க இருந்த முப்பெரும் விழாவை பன்னீர் தரப்பு தள்ளிவைத்தது. ஆனால், தீர்ப்பு தங்களுக்கு எதிராக வந்திருப்பதால், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பன்னீர் தரப்பு மேல்முறையீடு செய்திருக்கிறது. அதன்படி, அந்த வழக்கு நாளை (மார்ச் 29-ம் தேதி) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல, கட்சி தொடர்பாக சிவில் கோர்ட்டிலும் எடப்பாடி எதிராக வழக்குகள் தொடர ஏற்பாடு நடந்து வருகிறது.



from India News https://ift.tt/4j15QOx

Post a Comment

0 Comments