டிரெண்டிங்கில் வரலைன்னா பதவி இருக்காது முதல் சென்னையைக் கைப்பற்ற புது பிளான் வரை - கழுகார் அப்டேட்ஸ்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடிவருகிறார்கள் தி.மு.க தொண்டர்கள். `ஆடம்பரம் வேண்டாம்’ எனச் சொல்லியும் வழக்கம்போல தி.மு.க-வினர் அதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை. சீர்வரிசை எடுத்துச்செல்வது, ஆட்டம், பாட்டம் என அண்ணாசாலையையே கலங்கடித்துவிட்டார்கள். இதன் ஒரு பகுதியாக முதல்வர் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியுடன் #HBDMKStalin70 என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் இந்திய அளவில் நம்பர் ஒன் இடத்துக்குப் போனது. என்றைக்கும் இல்லாத அளவுக்கு தி.மு.க ஐடி விங் தீயாக வேலை செய்திருக்கிறதே என்ன காரணம் என விசாரித்தால், ‘டிரெண்டிங்கில் வர வேண்டும்.

எந்தெந்த மண்டலத்திலிருந்து எத்தனை ட்வீட் போடப்பட்டது என்ற கணக்கு வர வேண்டும். அப்படிச் செய்யவில்லையென்றால் பதவி இருக்காது’ என ஐ.டி.. மேலிடத்திலிருந்து உத்தரவாம். அதையடுத்தே ஐடி விங் தீயாக வேலை செய்திருக்கிறது என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு வரும் மார்ச் 5, 6, 7 ஆகிய மூன்று நாள்களில் 234 தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறது அ.தி.மு.க. குறிப்பாக, ஆர்.கே.நகரில் 5-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசுகிறார். அதென்ன ஆர்.கே.நகர் என்று கேட்டால், ‘அ.தி.மு.க-வின் கோட்டையாக இருக்கும் கொங்கு மண்டலத்தை தி.மு.க குறிவைக்கிறது. எனவே, தி.மு.க.வின் கோட்டையாக இருக்கும் சென்னையில் கைவைக்க வேண்டும் என்று நினைக்கிறார் எடப்பாடி.

அதற்கு முன்னோட்டமாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடசென்னை தொகுதி குறிவைக்கப்பட்டிருக்கிறது. அதற்காகத்தான் இடைத்தேர்தலில் ஜெயலலிதா நின்று வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதியிலிருந்து பொதுக்கூட்டத்தைத் தொடங்கலாம் என்று சென்டிமென்ட்டாக முடிவெடுத்திருக்கிறார் எடப்பாடி’ என்கிறது எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரம்.

அவார்டு மாவட்டத்துக்கு எந்தப் பெரிய அதிகாரி வந்தாலும், அந்த மூத்த இனிஷியல் அமைச்சருக்குக் கட்டுப்பட்டவராகவே இருக்க வேண்டும் என்பது எழுதப்பட்டாத விதி. ஆனால் காவல் அதிகாரி ஒருவர், “போலீஸ் வழக்கு, சட்டம்-ஒழுங்கு பிரச்னையில் மட்டும் நீங்க தலையிடாதீங்க சார்” என நேரடியாகவே அமைச்சரிடம் பொங்கிவிட்டாராம். இதில், அப்செட்டான மாண்புமிகு, “நான் சொல்றதையே எதிர்த்து பேசுற ஆளு நமக்கு வேண்டாம்... தம்பிக்கு எந்த ஊருக்கு டிரான்ஸ்ஃபர் வேணும்னு கேளுங்கடே... அனுப்பிடலாம்’ என்று ‘சாமி’ படத்து வில்லன்போல கட்சிக்காரர்களிடம் கொந்தளித்தாராம். சம்பவம் நடந்து பல நாள்களாகியும் எந்த மாற்றமும் இல்லாததால், “வீரமெல்லாம் நம்மகிட்டதான்... மேலிடத்துல இவரோட பவர் ஒண்ணும் வேலைக்கு ஆகாதுபோல” என முணுமுணுக்கிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள்!

முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை கட்சியிலிருந்து நீக்கியதிலிருந்து, திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் பதவி காலியாகக் கிடக்கிறது. இந்தப் பதவியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என முன்னாள் ஆவின் சேர்மன் ஒருவரும், மாநகராட்சி முன்னாள் நிர்வாகி ஒருவரும் தீவிரமாகக் காய்நகர்த்திவருகிறார்கள். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிக்குச் சென்ற இருவரும், தேர்தல் வேலையை விட்டுவிட்டு கொங்கு மண்டல அ.தி.மு.க சீனியர்களைச் சுற்றிச் சுற்றி வந்திருக்கிறார்கள். எப்படியாவது அவர்கள் வாயிலாகத் துணிவானவரை அணுகி, நாற்காலியில் துண்டைப்போட்டுவிட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்திருக்கிறார்கள்.

கடுப்பான கொங்கு சீனியர்களோ, “முதலில் வந்த வேலையில் கவனம் செலுத்துங்கள். மற்றதை எலெக்‌ஷன் ரிசல்ட் வந்ததும் பாத்துக்கொள்ளலாம்” எனச் சொன்ன பிறகே தேர்தல் வேலையில் இருவரும் கவனம் செலுத்தினார்களாம்.

‘அந்தப் பொதுக்குழு செல்லும்’ என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் குஷியான துணிவானவர், ஒற்றைத் தலைமையான தனக்கு இனிமேல் எதிரியே இருக்கக் கூடாது என்று கருதுகிறாராம். சின்ன தலைவியைப்போல, பணிவானவரையும், ட்ரிபிள் இனிஷியல் தலைவரையும் தனிமரமாக்கிவிட வேண்டும் என்று உத்தரவுக்கு மேல் உத்தரவு போடுகிறாராம். பணிவானவரின் அணியிலிருக்கும் 16 மாவட்டச் செயலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது துணிவு தரப்பு. ஆனால், ‘இங்கே இருந்தா மாவட்டச் செயலாளர் பட்டமாவது மிஞ்சும்... துணிவானவர் பக்கம் வந்தா சும்மா திண்ணையில உட்கார வெச்சுடுவாங்களே?’ என்று சிலர் நழுவிவிட்டார்களாம்.

அவர்களை என்ன சொல்லி இழுப்பதென்று தலையைப் பிய்த்துக்கொள்கிறது துணிவானவர் தரப்பு. ‘கட்சி கன்ட்ரோல் மொத்தமாகக் கைக்கு வந்து ஒரு வாரமாச்சு... இன்னும் அவங்களை நம்ம பக்கம் இழுக்க முடியலியா?’ என அநியாயத்துக்கு அவசரப்படுகிறாராம் துணிவானவர்!



from India News https://ift.tt/xD2VrqQ

Post a Comment

0 Comments