இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட விநாயக் தாமோதர் சாவர்க்கர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் மறைந்து 55 ஆண்டுகள் கடந்த நிலையில், இவரது பெயர் இன்றைக்கு இந்திய அரசியலில் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது.
‘இந்தியாவில் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது’ என சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லண்டனில் பேசினார். அதற்காக, அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பா.ஜ.க வலியுறுத்தியது. இந்தப் பிரச்னையால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டது. இதற்கிடையில், மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசியதாக ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அதையடுத்து, அவரது எம்.பி பதவி மார்ச் 23-ம் தேதி பறிக்கப்பட்டது.
அதற்கு மறுநாள் டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ராகுல் காந்தி. அப்போது, ‘என் பெயர் சாவர்க்கர் அல்ல. என் பெயர் காந்தி. நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன்’ என்றார் ராகுல் காந்தி. ராகுல் காந்தியின் அந்தக் கருத்துக்கு, சிவசேனா (உத்தவ் தாக்கரே) தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
உத்தவ் தாக்கரே, “அந்தமான் சிறையில் கற்பனைகூட செய்ய முடியாத அளவுக்கு பல கொடூரங்களை அனுபவித்தவர் சாவர்க்கர். அதுவும் ஒருவிதமான தியாகம்தான். சாவர்க்கரை இழிவுபடுத்துவதை சகித்துக்கொள்ள மாட்டோம். சாவர்க்கர் எங்களின் கடவுள். அவரை அவமரியாதை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரை இழிவுபடுத்திப் பேசுவதை ராகுல் காந்தி நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று உத்தவ் தாக்கரே கூறியிருக்கிறார்.
சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கரும் ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்காவிட்டால், அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன்” என்று கூறினார்.
பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவரும் கர்நாடகாவில், எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சாவர்க்கர் குறித்த ஒரு தகவல் சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, "அந்தமான் சிறையில் சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த அறையில், ஒரு சிறிய சாவித் துவாரம்கூட இல்லை. இருப்பினும், புல்புல் பறவைகள் எங்கிருந்தோ அறைக்கு வரும். சாவர்க்கர் ஒவ்வோர் நாளும் தாய்நாட்டிற்குச் செல்ல அந்த பறவைகளின் இறக்கைகளில் அமர்ந்து பறந்து செல்வார்" என்று அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சாவர்க்கர் பற்றிய அந்தப் பகுதி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், சமூகஊடகங்களில் பரவலாக கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானது. சாவர்க்கரைப் பற்றி மிகைப்படுத்திச் சொல்வதற்காக அப்படி எழுதப்பட்டிருப்பதாக சிலர் விளக்கம் சொன்னார்கள். சமீபத்தில், கர்நாடகா சட்டமன்றத்துக்குள் சாவர்க்கர் படத்தை பா.ஜ.க-வினர் வைத்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்போது, ராகுல் காந்தியின் கருத்தால் சாவர்க்கர் குறித்து மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்தது. சாவர்க்கர் பற்றிய சர்ச்சை ஏன் அடிக்கடி எழுகிறது என்ற கேள்வியை பா.ஜ.க-வின் மாநில துணைத் தலைவர் பேராசிரியர் கனகசபாபதியிடம் கேட்டோம்.
“சாவர்க்கர், நம் நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தியாகி. மிக மோசமான சிறைக்கொடுமைகளை அனுபவித்தவர் அவர். அந்தமான் சிறையில் அவரை அடைத்துவைத்திருந்த அறையில் ஜன்னல் வசதிகூட கிடையாது. பல அடி உயரத்தில் சிறிய துவாரம் மட்டுமே இருந்தது. இப்படி பல கொடுமைகளை அவர் அனுபவித்தார். விடுதலையாகி வந்த பிறகு, ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்காக பல பணிகளைச் செய்தார். அந்தக் குழந்தைகள் படிப்பதற்காக பள்ளிக்கூடம் ஆரம்பித்தார். அவர்களை கோயிலுக்குள் அழைத்துச்சென்றார். சாதி மறுப்பு இயக்கத்தை பெரிய அளவில் நடத்தினார்.
நம் தேசம் அடிப்படையில் ஓர் இந்து தேசம். இதற்கென்று தனித்தன்மை இருக்கிறது என்றதுடன், அந்த குணத்துக்கு இந்துத்துவம் என்று பெயர் என்று கூறினார். அதனால், இந்துத்துவம் என்றாலே சாவர்க்கரைத்தான் சொல்வார்கள். சாவர்க்கர் மன்னிப்புக் கேட்டார் என்று அவர்கள் சொல்கிறார்கள். அவர் அனுபவித்த கொடுமையை ஒரே ஒரு நாள் மட்டும் ராகுல் காந்தி அனுபவிக்கட்டும். அப்புறம் பார்க்கலாம். சாவர்க்கரை அந்தமான் சிறையில் அடைத்திருந்தார்கள். நேருவை எந்த மாதிரி சிறையில் அடைத்தார்கள் தெரியுமா... மாளிகையில் அவரைத் தங்கவைத்திருந்தார்கள். சாவர்க்கர் மிகப்பெரிய தியாகி. என்னை விடுதலை செய்யுங்கள் என்று சாவர்க்கர் கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு காரணம், வெளியே வந்து வேலை செய்வதற்குத்தான். அவர் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப்பார்த்தால் நமக்கு கண்ணீர் வரும். தேசத்துக்காகவே வாழ்ந்தவர் அவர்.
அவரது போராட்டங்களையும் உயர்ந்த குணங்களையும் இந்திரா காந்தி உட்பட பல தலைவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், தற்போது அரசியல் காரணங்களுக்காக காங்கிரஸ் கட்சியும் மற்ற பிற கட்சிகளும் சாவர்க்கரின் பெருமையை ஏற்றுக்கொள்வதில்லை. காரணம், அவர்கள் சொல்கிற சுதந்திரப்போராட்டம் வேறு மாதிரியானது. அதனால் அவர்கள் அவ்வப்போது சாவர்க்கரை விமர்சிப்பது போலவும், கிண்டல் செய்வது போலவும் பேசுகிறார்கள். அது மிகவும் தவறு” என்கிறார் பேராசிரியர் கனகசபாபதி.
இந்த விவகாரம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினரான த.லெனினிடம் பேசினோம்.
“சாவர்க்கர், இந்திய விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்றவர். அதற்காக, அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அந்தமான் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரால், சிறைக்கொடுமைகளைத் தாங்க முடியவில்லை. அதனால், ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு அவர் மன்னிப்புக் கடிதங்களை எழுதினார். தனக்கு உடல்நிலை சரியில்லை என்று காரணம் சொல்லி, விடுதலை செய்யுங்கள் என்று கோரி எழுதியிருந்தாலாவது பரவாயில்லை.
‘நீங்கள் தாயுள்ளத்துடன்கூடிய ஆட்சியாளர்கள். என்னை நீங்கள் விடுதலை செய்தால், அரசியல் ரீதியாக நான் செயல்பட மாட்டேன். உங்களுக்கு விசுவாசமாக நடந்துகொள்வேன்’ என்றெல்லாம் கடிதத்தில் அவர் எழுதினார். இதுபோல ஐந்து மன்னிப்புக் கடிதங்களை சாவர்க்கர் எழுதினார். இப்படி அவர் மன்னிப்புக் கடிதங்களை எழுதியதைத்தான், ராகுல் காந்தி உட்பட பலரும் சுட்டிக்காட்டிவருகிறார்கள்.
1930-களில் சாவர்க்கரின் அரசியல் நிலைப்பாடு மாறியது. ஆங்கிலேயர் எதிர்ப்பு என்ற நிலையிலிருந்து, இஸ்லாமிய எதிர்ப்புக்கு அவர் மாறினார். இந்தியா முதலில் அடிமையானது இஸ்லாமியர் படையெடுப்பால்தான் என்று அதை முதன்மைப்படுத்தினார். அது மட்டுமல்ல, ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமாக இருங்கள் என்று சாவர்க்கர் போதித்தார். சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் உருவான இந்திய தேசிய ராணுவத்தை எதிர்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். அவருடைய இந்த நிலைப்பாடுகளெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
சாவர்க்கரை சுதந்திரப்போராட்ட தியாகி என்று கொண்டாட முடியாது. ஏனென்றால், முன்னாள் முதல்வர், முன்னாள் பிரதமர் என்று சொல்லாம். ஆனால், முன்னாள் சுதந்திரப் போராட்ட தியாகி, முன்னாள் புரட்சியாளர் என்று யாரையாவது சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னால் சுதந்திரப் போராட்டத்துக்கு அவர்கள் துரோகம் செய்துவிட்டார்கள் என்று அர்த்தம். ஒரு காலத்தில் சுதந்திரத்துக்காகப் போராடிய சாவர்க்கர், பிறகு, மன்னிப்புக் கடிதம் எழுயதுடன், ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமாக இருப்பேன் என்று சொன்னதை எப்படி எடுத்துக்கொள்வது? அது, சுதந்திரப் போராட்டத்துக்கு அவர் செய்த துரோகம்.
வலதுசாரி சித்தாந்தம் கொண்ட பலரும் விடுதலைப் பேராட்டத்தில் கலந்துகொண்டனர். அந்த வகையில், ஆஷ் துரையைக் கொலை செய்த வாஞ்சிநாதனை ஒரு சுதந்திரப் போராட்டவீரராக ஏற்றுக்கொள்கிறோம். பாலகங்காதர திலகரும் இந்துத்துவா கண்ணோட்டம் கொண்டவர், பழைமைவாதி. ஆனால், சுதந்திரப்போராட்டத்தில் கடைசிவரை அவர் சோரம்போகவே இல்லை. அவரை சுதந்திரப்போராட்ட வீரராக ஏற்றுக்கொள்ள முடியும். அவருடைய மகன், அம்பேத்கருக்கு மிக முக்கியமான நபராக இருந்தார். சாவர்க்கரைப் பொறுத்தளவில், சிறையிலிருந்து விடுதலையாக வேண்டும் என்பதற்காக ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக்கேட்டார் என்பது மட்டுமல்ல, அவர் ஆங்கிலேயர்களிடம் ஓய்வூதியமும் வாங்கினார். எனவேதான், அவரை சுதந்திரப் போராட்ட வீரராக ஏற்க முடியாது என்கிறோம்.
வகுப்புவாத அரசியல், பிளவு அரசியல், மகாத்மா காந்தி கொலை என எல்லாவற்றிலும் அவர் சம்பந்தப்பட்டிருக்கிறார். காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவின் குரு சாவர்க்கர்தான். இவருக்கு தெரியாமல் காந்தி கொலை நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லப்படுகிறது. இப்படியான சர்ச்சைக்குரிய நபராக சாவர்க்கர் இருப்பதால்தான், இன்றைக்கு அவர் சர்ச்சையில் அடிபடுகிறார். ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு ஐந்து முறை மன்னிப்புக் கடிதம் எழுதினார் என்பதால்தான், ராகுல் காந்தி போன்ற தலைவர்கள் அவரைக் குறிப்பிட்டுப் பேசுகிறார்கள்” என்கிறார் த.லெனின்.
from India News https://ift.tt/lSWy8cZ
0 Comments