`வந்தேறிகள்' சர்ச்சை விவகாரம் - சீமானை விளாசும் திருமா... தொடங்கியதா புதிய மோதல்?!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலின்போது, கருங்கல்பாளையத்தில் நாம் தமிழர் கட்சியின் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் வாழும் அருந்ததியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்று பேசியிருக்கிறார். அருந்ததியர்கள் தெலுங்கு மொழியில் பேசுவதால், அவர்கள் தமிழர்கள் அல்ல என்ற கருத்தையும் அவர் முன்வைத்திருக்கிறார்.

சீமான்

அவரின் கருத்து அருந்ததியர் சமூகத்தினரைக் கொந்தளிக்க வைத்தது. அருந்ததியர்களை வந்தேறிகள் என்று சீமான் பேசியதாக அருந்ததியர் அமைப்புகளும் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. சீமானுக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக எழுந்த நிலையில், தனது பேச்சு குறித்து பல்வேறு ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்த சீமான், அருந்ததியர்கள் பற்றிய அந்தக் கருத்தை வரலாற்றின் அடிப்படையில்தான் குறிப்பிட்டேன் என்றார். ஆனால், சீமான் குறிப்பிடும் வரலாறு தவறானது என்ற வாதத்தை அருந்ததியர் தரப்பினர் முன்வைக்கிறார்கள். இந்த சர்ச்சை குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனிடம், ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கேட்கப்பட்டது.

திருமாவளவன்

அப்போது, சீமான் பேசிய கருத்து குறித்து தனது நிலைப்பாட்டை விரிவாக முன்வைத்தார் திருமாவளவன். “இந்த மண்ணில் அருந்ததியர் வந்தேறிகள் என்று பேசுவது மிகவும் வேதனையாக இருக்கிறது. மனிதகுல வாழ்க்கையில் மனிதன் புலம்பெயர்ந்துகொண்டே இருப்பான். அவனுக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. படையெடுப்பு என்பது வேறு. புலம்பெயர்தல் என்பது வேறு. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மும்பையில், டெல்லியில், பெங்களூருவில், அகமதாபாத்தில் என எத்தனையோ ஊர்களில் இருக்கிறார்கள். இப்படியாக, லட்சக்கணக்கானவர்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள்” என்றார் திருமாவளவன்.

மேலும், “உலக நாடுகள் முழுவதும் மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். இது, மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது. அந்த வகையில், அருந்ததியர்கள் மட்டும் வரவில்லை. அவர்களுடன் வேறு எத்தனையோ சமூகத்தினர் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார்கள். அருந்ததியர்கள் தூய்மைப்பணி செய்ய வந்தார்கள் என்று பணியைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். அவர்கள் தூய்மைப்பணி செய்ய வந்தார்கள்... கக்கூஸ் கழுவ வந்தார்கள் என்றெல்லாம் பேசுவது அந்த மக்களை காயப்படுத்துகிற செயல். இப்படியெல்லாம் பேசுவது இனவாதத்தின் உச்சம்” என்று விமர்சித்தார் திருமாவளவன்.

திருமாவளவன்

‘வரலாற்றை பேசுவதாகத்தானே சீமான் சொல்கிறார்...’ என்ற கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், ‘மார்வாடிகளும் இங்கு வந்திருக்கிறார்கள். சென்னையின் பெரும்பகுதியை மார்வாடிகள் ஆக்கிரமித்துவிட்டார்கள். ஆனால், மார்வாடிகளை வந்தேறிகள் என்று யாரும் சொன்னதாகத் தெரியவில்லை. இஸ்லாமிய படையெடுப்பின்போது எத்தனையோ இஸ்லாமியர்கள் இங்கு வந்து குடியேறியிருக்கிறார்கள். உருது பேசும் இஸ்லாமியர்களை இந்தத் தொழில் செய்ய வந்தார்கள் என்று என்றைக்காவது நாம் பேசியிருக்கிறோமோ?

மனிதகுலத்தை மொழி அடிப்படையிலோ, இனத்தின் அடிப்படையிலோ கொச்சைப்படுத்துவது என்பது பா.ஜ.க-வினுடைய வெறுப்பு அரசியலின் ஒரு மாதிரி. தமிழினத்தின் உரிமைகளைப் பாதுகாப்பது, தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பது மட்டுமே தமிழ் தேசியம் இல்லை. தமிழன்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று சொல்லும்போது அது இனவாதமாக மாறுகிறது. அடுத்ததாக, இனவெறுப்பாக அது மாறும்” என்றார் திருமாவளவன்.

சீமான்

சீமானின் கருத்துக்கு எதிர்வினையாற்றிய திருமாவளவனின் காணொளி, நாம் தமிழர்கள் வட்டாரத்தில் பரவி அனலைக் கிளப்பியது.

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்  இளஞ்சிறுத்தைகள் பாசறை செயலாளர் தா.மாலினிடம் பேசினோம். “விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்றைக்குமே அருந்ததியர்களை தெலுங்கர்கள் என்று சொன்னதில்லை. மண்ணின் மைந்தர்கள் என்றுதான் அவர்களை சொல்கிறோம். சக்கிலியர், பகடை, மாதாரி, தோட்டி போன்ற ஏழு உட்பிரிவுகளைக் கொண்டதுதான் அருந்ததியர் சமூகம். தென் மாவட்டங்களில் இருக்கும் சக்கிலியர், பகடை, தோட்டி ஆகிய உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தெலுங்கு பேசாதவர்கள்.

மாலின்

மதுரைவீரன் ஒரு சக்கிலியர் சமூகத்தைச் சேர்ந்த மன்னன் என்கிற வரலாறு இருக்கிறது. பௌத்த வழிவந்த சாக்கியர் குலத்தைச் சேர்ந்தவர்கள்தான் சாக்கியர்கள். அவர்கள்தான், சக்கிலியர்களாக மாறியிருக்கிறார்கள். அதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் பல பகுதிகளில் சக்கிலியர் குளம், சக்கிலியர் மங்கலம், சக்கிலியர் ஏரி என இருக்கின்றன. சக்கிலியர்கள் தோல் தொழிலில் ஈடுபட்டவர்கள். மன்னர்களின் வாள்களுக்கு தோலுறை தயாரித்தவர்கள். எனவே, மண்ணின் மைந்தர்களான அருந்ததியர்களை வந்தேறிகள் என்று சொல்வது தவறானது. இந்தப் பார்வையைத்தான் எங்கள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் முன்வைத்திருக்கிறார். அதைப் புரிந்துகொள்ளாமல் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேசுவது, அவர்களின் புரிதலற்ற பார்வையையே காட்டுகிறது” என்றார் த.மாலின்.

இந்த விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையின் பொறுப்பாளர் இடும்பாவனம் கார்த்தியிடம் பேசினோம். “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியபோது, வரலாற்றை காலவரிசைப்படி பேசிக்கொண்டுவந்தார். அப்போது, அருந்ததியர் மக்கள் இப்படி வந்தார்கள் என்று போகிற போக்கில் ஒரு செய்தியைச் சொன்னார். அந்தப் பேச்சில் ‘வந்தேறிகள்’ என்ற வார்த்தையே கிடையாது. ஆனால், நாங்கள் வந்தேறிகள் என்று சொன்னதாக திரித்து பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், அதற்கு ஒரு அரசியல் உள்நோக்கம் இருக்கிறது.

சீமான் சொல்லாத ஒரு வார்த்தையை திருமாவளவன் சொல்வது தவறானது. ‘அருந்ததியர் மட்டுமா வந்தார்கள்... ரெட்டியார்களும் நாயுடுகளும் வந்தார்கள்’ என்று திருமாவளவனே சொல்கிறார். எங்களைப் பொறுத்தவரை, அவர்கள் வந்தார்கள் என்றுதான் சொல்கிறோமோ ஒழிய அவர்களுக்கு எந்த உரிமையும் கொடுக்கக்கூடாது என்பது போன்ற கருத்துக்கள் எதையும் சொல்லவில்லை. வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கும்போது, அவர்கள் வந்தவர்கள்தானே என்றுதான் சொல்கிறோம். அருந்ததியர்கள் தெலுங்கு மொழி பேசுகிறார்கள். அதனால், தெலுங்கர்கள் என்று சொல்கிறோம். அதற்காக, எங்கள் மனம் புண்படுகிறது என்று சொன்னால் அதற்கு என்ன செய்ய முடியும்?

இடும்பாவனம் கார்த்திக்

அதே நேரம், அருந்ததியர் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் எழுப்பிவருகிறோம். அவர்களுக்கு ஆதரவாக பல இடங்களில போராட்டங்கள் நடத்தியிருக்கிறோம். எங்கள் கட்சியில் மாவட்ட, மாநில பொறுப்பாளர்களாகவும் வேட்பாளர்களாகவும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் எந்தவொரு தேசிய இனத்தவரையும் பகையினமாகக் கருதவில்லை. ஆனால், தி.மு.க கூட்டணியில் இருக்கும் தலித் அரசியலை முன்னெடுக்கும் பல அமைப்புகள் இதைப் பிடித்துக்கொண்டு நாம் தமிழர் கட்சியைத் தாக்குகிறார்கள். சொல்லாத ஒரு கருத்தை, திரித்து அந்த மக்கள் மத்தியில் நாம் தமிழர் கட்சி குறித்தான ஒரு வெறுப்பை உருவாக்குவது அற்பத்தனமான அரசியல்” என்கிறார் இரும்பாவனம் கார்த்திக்.



from India News https://ift.tt/bn3tucv

Post a Comment

0 Comments