தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய, பெங்களூரு ஐடி நிறுவன பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில், 28 வயதான திருமணமான பெண் ஊழியர் ஒருவர் பணியாற்றி வந்தார். கடந்த 2005-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி இரவு, தனது பணியை முடித்துக் கொண்டு நிறுவனத்தின் காரில், அவர் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது, டிரைவர் சிவக்குமார் (34), அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கொலை செய்தார்.
இந்த விவகாரம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய கர்நாடக போலீசார், டிரைவர் சிவக்குமாரை கைது செய்தனர். இவ்வழக்கில், 2010ம் ஆண்டில் தீர்ப்பளித்த கர்நாடக விரைவு நீதிமன்றம், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 366 (கடத்தல்), 376 (பலாத்காரம்) மற்றும் 302 (கொலை) ஆகிய பிரிவுகளின் கீழ் சிவக்குமார் குற்றவாளி எனவும், அவரை சாகும்வரை சிறையில் அடைக்க வேண்டுமென்றும் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிவக்குமார் தரப்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, தனது தண்டனையை குறைக்கும்படி கோரி, சிவக்குமார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் நீதிபதி ராஜேஷ் பிண்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு, செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
நீதிபதிகள் தங்களது உத்தரவில், ``குற்றம் சாட்டப்பட்டவர்களை சீர்திருத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நீதிமன்றம் பரிசீலிக்கும் போது, இதுபோன்ற ஒரு மிருகத்தனமான வழக்கில் தேவையற்ற மெத்தனம் காட்டுவது, செயல்திறனில் பொதுமக்களின் நம்பிக்கையை மோசமாக பாதிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவரின் உரிமைகளையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த சூழ்நிலைகளை பரிசீலித்த பிறகு, இது 30 வருட காலத்திற்கு தண்டனை விதிக்கப்பட வேண்டிய ஒரு வழக்கு என்று நாங்கள் கருதுகிறோம்.
பெங்களூரு இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு ஆகும். அங்கு வெளிநாடுகளுக்கு பணிபுரியும் நிறுவனங்களும் உள்ளதால் ஊழியர்கள் இரவில் வேலை செய்கிறார்கள். அத்தகைய நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் பெண்கள். நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
கை நிறைய சம்பாதித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணின் அழகான வாழ்வு, குற்றவாளியின் பாதகச் செயலால் 28 வயதிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. மேல்முறையீட்டாளர் செய்த முதல் குற்றம் இது என்ற உண்மையுடன் இந்த காரணிகளையும் கருத்தில் கொண்டு, விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கு 'அரிதில் அரிதான' வழக்குகளின் பிரிவில் இது வரவில்லை என்று கண்டறிந்தது.
மாநில அரசு மேல்முறையீடு செய்யாததன் மூலம் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தருவதற்கான முயற்சியில் அது தோற்றுவிட்டது. இவ்வழக்கில், குற்றவாளி 30 ஆண்டுகள் முழுமையாக சிறையில் இருக்க வேண்டும்; அதற்கு முன்பு அவரை விடுவிக்கக்கூடாது" என்று தீர்ப்பளித்தனர்.
from India News https://ift.tt/DAdRjLO
0 Comments