புதுவையில் வீட்டு உபயோகம், வணிக உபயோகம், உயர் மின் அழுத்தம் ஆகியவற்றுக்கு கட்டணம் உயர்த்துவதற்காக உத்தேச கட்டண பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை மின்துறை மற்றும் மின் திறல் குழுமம் 2023-24-ம் ஆண்டிற்கான மின் கட்டணம் நிர்ணயம் மற்றும் வருவாய் தேவை தொடர்பாக தாக்கல் செய்துள்ள விண்ணப்பம் மீது இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள பி.எம்.எஸ்.எஸ் அரங்கில் நடந்தது. ஆணைய உறுப்பினர் ஜோதிபிரசாத் தலைமை வகித்த கூட்டத்தில் புதுவை மின்துறை தலைவர் சண்முகம், வரவுசெலவு குறித்து விளக்கினார்.
அதையடுத்து பேசிய மாணவர் பெற்றோர் நலச்சங்கத்தலைவர் பாலா, ``புதுவை அரசில் உள்ள துறைகளும், தனியார் நிறுவனங்களும் எவ்வளவு தொதையை மின் கட்டண பாக்கியாக வைத்துள்ளனர் என தெரிவிக்க வேண்டும்" எனக்கேட்டார். அதற்கு, மின்துறை தலைவர் சண்முகம், `கட்டண உயர்வுக்கு சம்பந்தமில்லாத கேள்வி. துறைவாரியாக விபரங்கள் இல்லை' என தெரிவித்தார். அதையடுத்து கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து, `பாலா எழுப்பிய கேள்விக்கு உரிய பதிலை தெரிவிக்க வேண்டும். கட்டண உயர்வை மட்டும் பேச முடியாது. அதுதொடர்பான அனைத்து விஷயங்களையும் பேச வேண்டும்’ என கூறினர். அதையடுத்து வேறு வழியின்றி, `அரசு துறைகள் ரூ.300 கோடியும், தனியார் நிறுவனங்கள் ரூ.200 கோடியும் பாக்கி வைத்துள்ளனர்’ என தெரிவித்தார் மின்துறை தலைவர் சண்முகம்.
தொடர்ந்து பேசிய சுயேச்சை எம்.எல்.ஏ நேரு, ``கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதனால் ரூ.1,000/- கட்டணம் செலுத்தியவர்கள் பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி செலுத்த வேண்டிய நிலை உள்ளது. மின்துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. பிரீபெய்டு மின் மீட்டர் பொருத்தும் திட்டத்தையும் தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இவற்றை ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறோம். கட்டணத்தையும் உயர்த்தக்கூடாது” என தெரிவித்தார்.
அவரை தொடர்ந்து மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு செயலாளர் ராஜாங்கம் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், பல்வேறு சமூக அமைப்புகள், கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர். ``கண் துடைப்புக்காக கூட்டம் நடத்தக்கூடாது, பங்கேற்றவர்களின் கருத்துக்களை கேட்டு நடைமுறைப்படுத்தும் வகையில் கட்டண உயர்வை அமல்படுத்தக் கூடாது” என வலியுறுத்தினர். ஆனாலும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்பது உறுதியாகியிருக்கிறது.
from India News https://ift.tt/cNbEfv9
0 Comments