தேனி பங்களாமேட்டில் அ.ம.மு.க சார்பில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், ``தேனியில் தான் முதன்முதலாக நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டேன். 1999-ல் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இதே தொகுதியில் மீண்டும் 2004-ம் ஆண்டில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன். ஆனால் ஜெயலலிதாவால் ராஜ்ய சபா உறுப்பினராக பதவி பெற்றேன். என்னோடு இதே பகுதியை சேர்ந்த ஒருவரும் ராஜ்ய சபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். எம்.ஜி.ஆர் யாரை எதிர்த்து அதிமுகவை ஆரம்பித்தாரோ அந்த கட்சியில் அவர் சேர்ந்துவிட்டார். தேனி மாவட்டத்தில் உள்ள அதிமுகவினர் திமுக-வுக்கு சென்று வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை.
அ.தி.மு.க வை மீட்டெடுக்க கஜினி முகமது போல் போர் தொடுத்து வெற்றி பெறும் வரை ஓய மாட்டோம். ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் உருவாக்கும் வரை உழைப்போம். அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, ஒரு இடைக்கால தீர்ப்பு தான். எனக்காக தொப்பி அணிந்து கொண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்கு கேட்டவர் எட்டப்பர் என்ற எடப்பாடி பழனிசாமி. துரோகம் செய்தவர் இன்று அ.தி.மு.கபொதுச்செயலாளர் பதவியில் அமர இருக்கிறார். அவர் ஆசை நிறைவேறாது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னம், கூட்டணி பலம், பண பலம் மற்றும் ஆட்சி அதிகாரம் இருந்தும் வெற்றி பெற முடியவில்லை. மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி உண்டாகும். அப்போது தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி நடக்கும். ஜெயலலிதா பல்வேறு போராட்டம் நடத்தி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் காட்டினார். அவர் வழியில் நாம் போராடி 152 அடியாக உயர்த்துவோம். முல்லை பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் மதுரையில் வாழ்ந்ததற்கான ஆதாரம் இல்லை என அவர் வாழ்ந்த இல்லத்தை இடித்துவிட்டு நூலகமாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஸ்டாலின், கருணாநிதிக்கு பேனா சிலை நிறுவும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றார்.
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக-வுக்கு பயந்து கொண்டு அதிமுக தொண்டர்களை எடப்பாடி பழனிசாமி பலியாக்கி வருகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு போட்டி திமுக அல்ல டிடிவி தினகரன், ஓ.பி.எஸ்-ஸூம் தான். துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. தற்போது வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றிருக்கலாம். சரியான நேரத்தில் மக்கள் தீர்ப்பளிப்பார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.
இரட்டை இலை சின்னத்தை வைத்து கொண்டு எடப்பாடி பழனிசாமி குதித்து கொண்டிருக்கிறார். இரட்டை இலை சின்னம் துரோகிகள் கையில் இருக்கிறது என்பதை தொண்டர்களும் உணர்ந்து வருகின்றனர். ஜனநாயக வழியில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவோம்” என்றார்.
from India News https://ift.tt/9yEQHzh
0 Comments