அதிமுக-வை இனி பிரச்னையின்றி வழிநடத்துவரா எடப்பாடி பழனிசாமி?!

அ.தி.மு.க-வின் பொதுக்குழு கூட்டங்கள் கடந்த ஆண்டு ஜூன் 23, ஜூலை 11 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனும் தேர்வுசெய்யப்பட்டனர். அதில், அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.

பன்னீர்செல்வம்

இந்த பொதுக்குழு கூட்டங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த தனி நீதிபதி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கினார். அதில், எடப்பாடி பழனிசாமி கூட்டிய இரண்டு பொதுக்குழுக்களும் செல்லாது என்றும், பொதுக்குழுவை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் சேர்ந்தே கூட்டியிருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்தத் தீர்ப்பால் பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாததாகிவிட்டது. எனவே, அதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில், கடந்த செப்டம்பர் 2-ம் தேதி இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில், தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ததுடன், எடப்பாடி பழனிசாமி கூட்டிய இரண்டு கூட்டங்களும் செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பி.வைரமுத்து ஆகிய இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர். சண்முகம் என்பவர் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க தலைமைக்கழகம் தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் இரு தரப்பிலும் விசாரிக்கப்பட்டு ஜனவரி 12-ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வமும் அவருடைய ஆதரவாளர்களும் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. பின்னர், பிப்ரவரி 23-ம் தேதி இரு நீதிபதிகளும் தீர்ப்பு வழங்கினர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில், ‘அ.தி.மு.க பொதுக்குழு விவகாரத்தில் உரிய அம்சங்களைக் கருத்தில் கொள்ளாமல் தனிநீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்ட அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அளித்த தீர்ப்பு உறுதிசெய்யப்படுகிறது’ என்று கூறப்பட்டது.

உச்ச நீதிமன்றம்

இதைத் தொடர்ந்து, இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டது செல்லும் என்பது உறுதியாகியிருக்கிறது. இந்தத் தீர்ப்பை வரவேற்ற இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘தர்மம், நீதி, உண்மை வென்றுள்ளது’ என்று கூறினார். அ.தி.மு.க-வின் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

“இனிமேல், எடப்பாடி பழனிசாமியால் அ.தி.மு.க-வை பிரச்னையின்றி வழிநடத்த முடியுமா...” என்ற கேள்வியை மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் முன்வைத்துப் பேசினோம்.

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்திருந்தாலும், அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். கட்சியை எடப்பாடி பழனிசாமி சமுகமாக நடத்தக் கூடாது என்று ஓ.பி.எஸ் நினைக்கிறார். பொதுக்குழு கூட்டியது சரியா, தவறா என்பதைப் பற்றி மட்டுமே உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருக்கிறது. மேலும், பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து எந்தப் பரிசீலனையும் உச்ச நீதிமன்றம் மேற்கொள்ளவில்லை.

ப்ரியன்

இவற்றை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள ஓ.பன்னீர்செல்வம் நினைக்கிறார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதா, இல்லையா என்கிற ஒரு விஷயமும் இருக்கிறது. இது தொடர்பாகவும் ஓ.பி.எஸ் நீதிமன்றம் போகலாம். இப்படியாக, எடப்பாடி பழனிசாமிக்கு அவர் இடையூறுகள் கொடுக்கலாம். இதனால், கால விரயம் ஏற்படுவதுடன், ஓ.பி.எஸ்ஸுடன் இருக்கும் தொண்டர்களை விரக்தியடையச் செய்யும்.

எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை, இடைக்காலப் பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்துவிடுவார். அது பற்றிய அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுவிட்டால், ஓ.பன்னீர்செல்வத்தால் அ.தி.மு.க பெயரைப் பயன்படுத்த முடியாமல் போகும். இனிமேல், எடப்பாடியிடம்தான் பா.ஜ.க உறவுவைத்துக்கொள்ளும் என்பது எடப்பாடிக்கு ஒரு சாதகம்தான். அதே நேரம், ஓ.பி.எஸ்ஸையும் கூடவே வைத்துக்கொண்டு, தேர்தல் நேரத்தில் அவரைப் பயன்படுத்திக்கொள்ள பா.ஜ.க முயற்சிக்கலாம்.

பன்னீர்செல்வம்

கட்சியை நடத்துவதிலும், பொதுமக்கள் பார்வையிலும், எடப்பாடி பழனிசாமியிடம் கட்சி போய்விட்டது என்றே பார்ப்பார்கள். இனிமேல் நிரந்தரப் பொதுச்செயலாளராக ஆவதற்கான முயற்சியில் எடப்பாடி இறங்குவார். அதே நேரம், ‘அம்மாவின் பதவியையே எடுத்துக்கொண்டார்’ என்று சொல்லி எடப்பாடிக்கு எதிராக ஓ.பி.எஸ் பிரசாரம் செய்யலாம்” என்கிறார் ப்ரியன்.

இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாமிடம் பேசினோம். “சட்டம் ஒரு இருட்டரை என்று சொல்வார்கள். இந்தத் தீர்ப்பை படித்துப் பார்த்தபோது, மேலும் இருட்டரையாக இருக்கிறது. இதில், தீர்ப்பு எதுவும் சொல்லப்படவில்லை. இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு செல்லும் என்றும், ஒரு நீதிபதி வழங்கிய தீர்ப்பை நாங்கள் ஏற்கவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. முட்டுக்கட்டையைத் தீர்ப்பதற்கு பதிலாக, மேலும் முட்டுக்கட்டையை உச்ச நீதிமன்றம் போட்டிருக்கிறது.

‘தராசு’ ஷ்யாம்

எது முட்டுக்கட்டை என்றால், ‘பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து நாங்கள் எதையும் பேசவில்லை. இரு நீதிபதிகள் தீர்ப்பை எதிர்த்துவந்த மேல்முறையீட்டில், அதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்’ என்கிறார்கள். பொதுக்குழு தீர்மானம் உள்ளிட்ட விவகாரங்களை கீழே போய் தீர்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். கீழே என்றால், ஒன்று தேர்தல் ஆணையம், இன்னொன்று தனி நீதிபதி. கீழே போகும்போது ஒவ்வொரு முறையும் ஓ.பி.எஸ் முட்டுக்கட்டை போடுவார். ஓ.பி.எஸ்-ஸால் வெற்றிபெற முடியாது என்றாலும், அதுபோன்ற நடவடிக்கைகளால் கட்சி பலவீனப்படும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் அ.தி.மு.க தற்போது உற்சாகத்துடன் காணப்படுகிறது. அடுத்தடுத்து வழக்குகள் வரும்போது அந்த உற்சாகம் குறைந்துவிடும். ஜனநாயகத்தில் வலுவான எதிர்க்கட்சி இருக்க வேண்டும். எனவே, அ.தி.மு.க விவகாரத்தில் இருக்கும் முட்டுக்கட்டைகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் நீக்கிக்கொடுத்திருக்க வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றம்

தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பி.எஸ் போக மாட்டார். ஏனென்றால், அங்கு சிவசேனா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புதான் வரும். விரைவில் தனி நீதிபதி முன்பாக ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்வார். இந்த மனு விசாரித்து முடிக்கப்படும்வரை தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்று தடை கேட்பார்கள். மொத்தத்தில், இப்படியான குழப்பங்கள் அடுத்த சில மாதங்களுக்கு நீடிக்கும்” என்கிறார் தராசு ஷ்யாம்.



from India News https://ift.tt/l8ARunW

Post a Comment

0 Comments