எல்லை விவகாரம்; சீனா குறித்த அமைச்சரின் பேச்சு - கடுமையாகச் சாடிய ராகுல்!

தனியார் செய்தி நிறுவனத்துக்கு சமீபத்தில் பேட்டியளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனா விவகாரம் குறித்தும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்தும் பதிலளித்தார். அப்போது, ``இந்தியா - சீனா எல்லைக்கு (எல்.ஏ.சி) ராணுவத்தை அனுப்பியது யார்... ராகுல் காந்தியா... அல்ல, பிரதமர் மோடி. நாங்கள் எல்லையைப் பலப்படுத்துகிறோம்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

நாங்கள் எங்கள் எல்லை உள்கட்டமைப்பை சட்டபூர்வமாக உருவாக்குகிறோம். ஏனென்றால் சீனாவும் தங்கள் எல்லை உள்கட்டமைப்பை உருவாக்குகிறது. எனது பார்வையில், இந்தியா 25 ஆண்டுகளுக்கு முன்பே உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும்விதமாக, ராய்பூரில் நடைபெற்றுவரும் காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, ``ஜெய்சங்கர் எல்லைப் பிரச்னை குறித்தப் பேட்டியில், `சீனர்கள் பெரிய பொருளாதாரம் கொண்டவர்கள். சிறிய பொருளாதாரமாக இருக்கும் நாம் என்ன செய்ய முடியும்... பெரிய பொருளாதாரத்துடனா நாம் சண்டையிடப் போகிறோம் என்பது பிற்போக்குத்தனமாக இருக்கலாம், ஆனால், இதுதான் பொது அறிவு' என்றிருக்கிறார்.

ராகுல் காந்தி

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா இந்தியாவைவிடப் பெரிய பொருளாதாரம் என்று குறிப்பிட்டிருப்பது கோழைத்தனம். நீங்கள் அதை தேசியவாதம் என்கிறீர்களா... ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடும்போது நமது பொருளாதாரம் மிகப் பெரியதாக இருந்ததா... நம்மைவிட வலிமையானவர்கள் முன் தலைவணங்குவதுதான் சாவர்க்கரின் சித்தாந்தம். அப்படியென்றால் உங்களைவிடப் பலவீனமானவர்களுடன்தான் சண்டை போடுவீர்களா?

கோழைத்தனம்தான் சாவர்க்கரின் சித்தாந்தம். அதே போலத்தான், `நீங்கள் எங்களைவிட வலிமையானவர்கள். அதனால், நாங்கள் உங்கள் முன் நிற்க முடியாது' என இந்திய அமைச்சர் சீனாவிடம் கூறியிருக்கிறார். நமது ராணுவ வீரர்களின் மனதிலும் பயத்தை விதைத்திருக்கிறார். இது என்ன தேசியவாதம்... இதுதான் கோழைத்தனம்" எனத் தெரிவித்திருக்கிறார்.



from India News https://ift.tt/cP4DaHv

Post a Comment

0 Comments