ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி தொழில் துறையினர், கட்சியின் நிர்வாகிகள், செயல்வீரர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டதையடுத்து ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் ஈரோடு மாவட்ட அனைத்து வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் (ஃபேட்டியா) நிர்வாகிகள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்களின் அமைப்பினரை அழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் எடப்பாடி.
அவருடன் கே.ஏ.செங்கோட்டையன், த.மா.கா. மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், த.மா.கா இளைஞரணி தலைவர் யுவராஜா உடன் இருந்தனர். இந்தக் கூட்டத்தில் செய்தியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
ஃபேட்டியா சார்பில் வணிகர்களின் எதிர்பார்ப்புகள், செய்து தர வேண்டிய பணிகள் குறித்த பட்டியலை எடப்பாடி பழனிசாமியிடம், ஃபேட்டியா தலைவர் வி.கே.ராஜமாணிக்கம், பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் வழங்கினர்.
பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, தனது ஆட்சிக்காலத்தில் வணிகர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளையும், தொழில் மேம்பாட்டுக்காக செய்து தரப்பட்ட சலுகைகளையும் பட்டியலிட்டார் எனச் சொல்லப்படுகிறது. தற்போது மின்கட்டண உயர்வால் விசைத்தறிகளும், வணிக நிறுவனங்களும் பாதிக்கப்பட்டிருப்பதையும், அ.தி.மு.க ஆட்சியில் திட்டமிட்டு தொடங்கிய பணிகள் முடிக்கப்பட்டு அதற்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளையே தி.மு.க. அரசு செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வால் தொழில் துறையினர் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்தும் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் வலுவான எதிர்க்கட்சியாக விளங்க வேண்டுமானால் இந்தத் தொகுதியில் அ.தி.மு.க வெற்றி பெற வேண்டியது கட்டாயம், வலுவான எதிர்க்கட்சியாக அ.தி.மு.கவை கட்டமைக்க வணிகர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும், அதற்கு வணிகர்கள் அ.தி.மு.கவை ஆதரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதைத் தொடர்ந்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள் தரப்பில் பேசும்போது, ஈரோட்டில் நீண்டநாள்களாக தீர்க்கப்படாத பிரச்னையாக சாயக்கழிவு நீர் பிரச்னை உள்ளது. குறிப்பாக ஈரோடு மாநகரில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட சாய, சலவை ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய ஒரு பொது சுத்திகரிப்பு நிலையம் கூட இல்லை. அதனை ஏற்படுத்தி தந்தால் தொழிலாளர்களுக்கும், வணிகர்களுக்கும் வாழ்வளிக்கும் இந்தத் தொழிலை பாதுகாக்க முடியும். தொழில் துறையினருக்கான மின்கட்டண உயர்வை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து வணிக சங்கங்கள் சார்பில் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கை மனுவை பரிசீலித்து எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற வணிகர்கள், `வேட்பாளர் தென்னரசு சுமார் 35 ஆண்டுக்கும் மேலாக ஈரோட்டில் உள்ள பல்வேறு வணிக சங்கங்களிலும் கௌரவ ஆலோசகராகவும், தலைவராகவும், உறுப்பினராகவும் இருந்தவர். எங்கள் பிரச்னைகளை நன்கு அறிந்தவர் என்பதால் அவருக்கு நாங்கள் எங்கள் ஆதரவை தெரிவிப்போம்’ என்று ஆதரவு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளான தேர்தல் பணிக்குழு தலைவர் கே.ஏ.செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, கே.வி.ராமலிங்கம் உள்ளிட்ட 117 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ``அ.தி.மு.க-வை அழிக்க நினைக்கும் எட்டப்பர்களுக்கு இந்தத் தேர்தலில் நாம் சரியான பாடம் கற்பிக்க வேண்டும். நமக்கு இடையூறாக இருந்த பல்வேறு பிரச்னைகளையும் எதிர்கொண்டு, அதை வீழ்த்தி இரட்டை இலை சின்னத்தை பெற்று விட்டோம். சின்னத்தை பெறுவதில் வெற்றி பெற்ற நாம், இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டியது அவசியம். எதிர் முகாமில் இருப்பவர்கள் வெற்றியை பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள். நாம் விழிப்போடு இருந்தால் மட்டுமே வெற்றி நம் வசமாகும். ஆளுங்கட்சியில் இருப்பவர்களால் மட்டுமே வெற்றியை வசப்படுத்த முடியும் என்ற பிம்பத்தை உடைத்தெறிய வேண்டுமானால், நாம் ஏற்கெனவே வகுத்த வியூகத்தின் அடிப்படையில் தேர்தல் களப்பணியாற்ற வேண்டும்” என்று பேசினார்.
இதைத்தொடர்ந்து பேசிய கட்சியின் நிர்வாகிகள், ஈரோடு கிழக்குத் தொகுதியின் தேர்தல் களத்தில் எதிர்கொண்டு வரும் பிரச்னைகள் குறித்தும், ஆளுங்கட்சியினர் வாக்குச் சேகரிப்பின்போது தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படுவது குறித்தும் பேசினர். உணவு இடைவேளையைக் கடந்தும் மாலை 4 மணி வரையிலும் கட்சியினருடன் தேர்தல் ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டார்.
அதைத்தொடர்ந்து, மண்டபத்தை விட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி, ரிசார்ட்டில் இருந்து 200 அடி தூரத்தில் இருந்த பேக்கரிக்கு கட்சியினருடன் பேசிக்கொண்டே நடந்து சென்றார். அவருடன் செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம், வேலுமணி, முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களும் நிர்வாகிகளும் சென்றனர்.
அங்குள்ள பேக்கரிக்குள் சென்ற எடப்பாடி பழனிசாமி, டீக்கடைக்காரரிடம், `எல்லாருக்கும் டீ போடுப்பா...’ என்று டீ ஆர்டர் செய்தார்.
கூட்டத்தை எதிர்பாராத அந்த பேக்கரி கடைக்காரர், சுதாரித்துக்கொண்டு பரபரவென இயங்கி அனைவருக்கும் டீயைக் கொடுத்தார். டீ அருந்தி விட்டு தனது காரில் ஏறி கிளம்பிச் சென்றார் எடப்பாடி பழனிசாமி.
from India News https://ift.tt/9i1FdYp
0 Comments