கேரள மாநிலம் கோட்டயத்தில் செயல்படும் கே.ஆர்.நாராயணன் பிலிம் இன்ஸ்டிட்யூட் சேர்மனாக இருந்தார் பிரபல திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இயக்குநராக இருந்த சங்கர் மோகன் தனது வீட்டுக் கழிவறையை பட்டியலின பெண் ஊழியர் மூலம் வெறுங்கைகளால் சுத்தம் செய்ய வைத்ததாகப் புகார் எழுந்தது.
மேலும் பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்கள் மத்தியிலும் சாதிய பாகுபாடு பார்ப்பதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து துப்புரவு பணியாளர்களும், பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என அடூர் கோபாலகிருஷ்ணன் கூறி வந்தார். மேலும் இயக்குநர் சங்கர் மோகனுக்கு முழு ஆதரவாக அடூர் கோபாலகிருஷ்ணன் செயல்பட்டார். இந்த நிலையில் போராட்ட நெருக்கடி காரணமாக கே.ஆர்.நாராயணன் பிலிம் இன்ஸ்டிட்யூட் இயக்குநர் பதவியிலிருந்து சங்கர் மோகன் கடந்த வாரம் ராஜினாமா செய்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த அடூர் கோபால கிருஷ்ணன் சேர்மன் பதவியில் இருந்து விலக உள்ளதாக நேற்று இரவு முதலே தகவல் வெளியாகின. இந்த நிலையில் பிலிம் இன்ஸ்டிட்யூட் சேர்மன் பதவியை இன்று ராஜிநாமா செய்திருக்கிறார் அடூர் கோபால கிருஷ்ணன். இதுகுறித்து அடூர் கோபால கிருஷ்ணன் திருவனாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எனது ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் கொடுத்துவிட்டேன். பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் நடந்த போராட்டத்தின் பின்னால் கேட் வாச்மேன் உள்ளிட்டவர்களுக்கு பங்கு உள்ளது. என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க மீடியாக்கள் தவறிவிட்டன.
அடூர் கோபாலகிருஷ்ணனை வெறி நாயாக சித்திரித்தார்கள். பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் வேலை செய்பவர்களில் பட்டியலினத்தவர் யாருமில்லை. இந்தியாவில் சிறந்த பிலிம் இன்ஸ்டிட்யூட்டாக கே.ஆர்.நாராயணன் பிலிம் இன்ஸ்டிட்யூட்டைக் கொண்டுவர கடந்த மூன்று ஆண்டுகளாக உழைத்தேன். என்னுடன் சங்கர் மோகனும் கடுமையாக உழைத்தார். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் போராட்டத்தைத் தொடங்கினார்கள். போராட்டத்தைத் தொடங்கிய பிறகுதான் காரணங்களைத் தேடிக் கண்டுபிடித்தனர்" என அடூர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து கூறுகையில், "அடூர் கோபாலகிருஷ்ணன் தனது எதிர்ப்பை ராஜினாமா மூலம் வெளிப்படுத்துகிறார் என்றால் அதில் எந்த அர்த்தமும் இல்லை. அவரது அனுமதியுடன் தான் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அடூரின் கருத்தில் அடிப்படை இருந்தால் அதுகுறித்து விசாரணை நடத்தப்படும். மாணவர்கள் எதிர்காலம் குறித்து கவலைப்பட வேண்டாம். சினிமா துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் வேறு சிலர் இருக்கிறார்கள். கேரளத்தின் மதிப்புமிக்க நிறுவனம் என்பதால் பொருத்தமான நபரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. மாணவர்கள் போராட்டம் தொடங்கியதில் இருந்து அரசு உண்மையைக் கண்டறிய வெளிப்படைதன்மையுடன் அணுகியது.
விசாரணைக்கு முதலில் இயக்குநர் ஒத்துழைக்கவில்லை. முதல்வரின் அறிவுரைப்படி இரண்டுபேரை விசாரணை கமிஷனராக நியமித்தோம். ரிப்போர்டில் உள்ள விஷயங்களைப் புரிந்துகொள்வதற்குள் சங்கர் மோகன் ராஜினாமா செய்தார். அடூர் கோபாலகிருஷ்ணன் கேரளத்தின் பெருமை. சென்சிட்டிவ் பிரச்னைகளை மிக கவனத்துடன் கையாள வேண்டும் என்பதை முதல்வர் நினைவுபடுத்தினார். மாணவர்களுக்கு உறுதிமொழி அளிக்கப்பட்டது யாரையும் இழிவுபடுத்தும் நோக்கத்தில் அல்ல" என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/Cbd36RK
0 Comments