கேரள மாநில உயர் நீதிமன்றம் கொச்சியில் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள நீதிபதிகளான குஞ்ஞிகிருஷ்ணன், முஹம்மது முஸ்தாக், சியாத் ரஹ்மான் ஆகியோருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என வழக்கறிஞர் சைபி ஜோஸ் கிடங்கூர் என்பவர் பலரிடம் பணம் வசூலித்துள்ளதாக உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் டீம் கண்டுபிடித்துள்ளது. வழக்குகளில் இருந்து விடுவிப்பதற்காக லஞ்சமாக பணம் கொடுக்க வேண்டும் என வக்கீல் சைபி ஜோஸ் கிடங்கூர் 72 லட்சம் ரூபாய் வரை லஞ்சமாக பெற்றதாக உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து விஜிலென்ஸ் அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அந்த அறிக்கையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
எர்ணாகுளம் சவுத் போலீஸ் ஸ்டேஷனில் சினிமா தயாரிப்பாளர் ஒருவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் தயாரிப்பாளர் தரப்பில் வழக்கறிஞர் சைபி ஜோஸ் கிடங்கூர் சினிமா தயாரிப்பாளரிடம் அறிமுகமாகி உள்ளார். சைபி ஜோஸ் தயாரிப்பாளரிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். அதில் ஐந்து லட்சம் ரூபாய் குறைக்க முடியுமா என தயாரிப்பாளர் கேட்டுள்ளார். அதற்கு நீதிபதி கூடுதல் பணம் எதிர்பார்க்கிறார் என சைபி ஜோஸ் கூறியிருக்கிறார். இதுபோன்று பலரிடம் பணம் வசூலித்திருக்கிறார் சைபி ஜோஸ்.
ஒரு நீதிபதியின் பெயரைக்கூறி அவருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என 50 லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளதாகவும், இதுவரை நீதிபதிகளின் பெயரைச் சொல்லி 72 லட்சம் ரூபாய் அவர் வாங்கியுள்ளதாகவும் உயர் நீதிமன்ற விஜிலென்ஸின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சைபி ஜோஸ் மூன்று ஆடம்பர கார்கள் சொந்தமாக வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவருவதும் தெரியவந்துள்ளது. சினிமா பிரபலங்கள் பலரின் வழக்குகளை சைபி ஜோஸ் கவனித்து வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சைபி ஜோஸுக்கு எதிராக நான்கு வக்கீல்கள் உயர் நீதிமன்ற அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். சைபி ஜோஸ் கிடங்கூர் மீது வழக்கறிஞர் சட்டப் பிர்வின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜிலென்ஸ் பரிந்துரைத்துள்ளது.
from தேசிய செய்திகள் https://ift.tt/6dhgJKZ
0 Comments