மோசடியில் ஈடுபடவேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கு புதுப்புது வழிகளை கண்டுபிடித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். மும்பையில் அது போன்ற ஒரு வித்தியாசமான கொள்ளை நடந்திருக்கிறது. தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிகர் சூர்யா சி.பி.ஐ அதிகாரி என்று கூறி ரெய்டு நடந்துவதை பார்த்திருக்கிறோம். ஆனால் மும்பையில் ரெய்டு நடத்தியவர்கள் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் என்று கூறியிருக்கின்றனர். மும்பை, ஜவேரி பஜார் பகுதியில் அதிகமான தங்கம், வைரம் விற்பனை செய்யும் வியாபாரிகள் இருக்கின்றனர்.
சிறிய கடையில்கூட பல கோடிக்கு தங்கம், வைரம் இருக்கும். ஜவேரி பஜாரிலுள்ள அது போன்ற ஓர் அலுவலகத்துக்குள் சிலர் நுழைந்தனர். அவர்கள் தாங்கள் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, வி.பி.எல் புல்லியன் என்ற கடைக்குள் நுழைந்து அதன் உரிமையாளர் ஒருவரின் பெயரை கூறிக்கேட்டனர். அதோடு அங்கு வேலை செய்த சிலருக்கு கைவிலங்கிட்டனர். மேலும் சிலரை ரெய்டுக்கு வந்தவர்கள் அடித்து உதைத்தனர்.
மொத்தம் 6 பேர் வந்தனர். அவர்களில் இரண்டு பேர் பெண்கள் ஆவர். இரண்டு பேர் கடைக்கு வெளியில் பாதுகாப்புக்கு நின்று கொண்டனர். 4 பேர் உள்ளே நுழைந்து அங்கு இருந்த ஊழியர்களை மிரட்டி `கடை உரிமையாளர் விராட் பாய் எங்கே' என்று கேட்டனர். ஊழியர்கள் அவர் இல்லை என்று தெரிவித்தவுடன் அனைவரும் மொபைல் போனுடன் சரணடையும்படி கேட்டுக்கொண்டனர். ரெய்டுக்கு வந்தவர்கள் அங்லிருருந்த பீரோவில் தேடிப்பார்த்ததில் ரூ.1.90 கோடி மதிப்பிலான பணம், நகைகள் இருந்தன.
அவற்றை எடுத்து எடுத்துக்கொண்டு, சில ஊழியருக்கு கைவிலங்கிட்டு, அதே கம்பெனிக்குச் சொந்தமான அருகிலிருந்த மற்றொரு அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு சென்ற பிறகு ஊழியர்களின் கைவிலங்கை கழற்றிவிட்டு 6 பேரும் தங்கம், பணத்துடன் தப்பிச்சென்றுவிட்டனர். இது குறித்து உடனே போலீஸில் புகார் செய்யப்பட்டது. உதவி இன்ஸ்பெக்டர் சுஷில் குமார் இது குறித்து, ``வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறோம். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் 6 பேர் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருந்தனர். கொள்ளையில் ஈடுபட்ட மொகமத் கிளிட்வாலா என்பவரை டோங்கிரியில் கைதுசெய்திருக்கிறோம்.
மால்வானியில் சமீர் என்பவரையும், கேட் என்ற இடத்திலிருந்து விசாகா என்பவரையும் கைதுசெய்திருக்கிறோம். எஞ்சிய மூன்று பேரையும் தேடி வருகிறோம். ஸ்பெஷல் 26 என்ற இந்திப் படத்தில் வருவது போன்று இந்தக் கொள்ளை சம்பவம் நடந்திருக்கிறது'' என்று தெரிவித்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/oTusfIL
0 Comments