சரிந்து விழுந்த ராட்சத பாறை... கல்குவாரி விபத்தில் சிக்கி இருவர் பலியான சோகம்!

தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள ஈரோடு மாவட்டம் தாளவாடியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது, கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டத்துக்கு உள்பட்ட பிசிலவாடி கிராமம். இப்பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்தக் குவாரியில் இருந்து வெடிபொருள்களை பயன்படுத்தியும், மெகா கல்உடைப்பு இயந்திரங்கள் மூலமாக எடுக்கப்படும் பாறைகளை பயன்படுத்தி கட்டடங்கள், சாலை அமைக்கத் தேவையான ஜல்லி, எம்.சாண்ட் போன்ற கட்டுமான பொருள்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர்.  

இந்த கல்குவாரியில் நேற்று 30-க்கும் மேற்பட்டவர்கள் பணி புரிந்து கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள ஹிட்டாச்சி இயந்திரத்தின் மூலம் குவாரியின் அடிப்பகுதியில் உள்ள பாறைகள் பெயர்த்து எடுக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, கீழ் பகுதியில் 3 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஒருகட்டத்தில் கீழே இருந்த கற்கள் பெயர்த்தெடுக்கும்போது மேற்பகுதியில் இருந்த பாறை மொத்தமாக சரிந்து விழுந்தது. இந்த எதிர்பாராத நிகழ்வால் பாறைகளின் இடிபாடுகளில் கீழே பணிபுரிந்து கொண்டிருந்த மூவரும் சிக்கிக் கொண்டனர்.  

உயிரிழந்தவரை மீட்கும் மீட்புப்படையினர்.

விழுந்த பாறைகள் ஒவ்வொன்றும் மெகா சைஸில் இருந்ததால் அடியில் சிக்கிக் கொண்ட குமார், சிவராஜ் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும்  பாறை இடுக்கில் சிக்கிய மற்றொரு சிவராஜை மீட்டு சாம்ராஜ் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து பிசிலவாடியைச் சேர்ந்த ஈரன் என்பவர் கூறுகையில், ``சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் சிக்கொல்லா, ராமாபுரம், பிசிலவாடி, கொள்ளேகால், குண்டல்பேட்டை, புளிஞ்சூர் போன்ற பல பகுதிகளில் இதுபோன்ற கல்குவாரிகள் எவ்வித பாதுகாப்பும் இன்றி இயங்கி வருகின்றன. இப்பகுதியில் சிக்கொல்லா, ஸ்வர்ணாவதி ஆகிய இரண்டு அணைகள் உள்ளன. இந்த நீர்த்தேக்கங்களில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகின்றன. தொடர்ந்த இப்பகுதியில் உள்ள கல்குவாரிகளில் அளவுக்கு அதிகமான வெடிபொருள்களை பயன்படுத்தி கற்களை பெயர்த்து எடுப்பதால் ஏற்படும் நில அதிர்வுகளால் இந்த இரண்டு அணைகளுக்கும் பெரும் ஆபத்து இருக்கிறது. மேலும், நில அதிர்வுகளால் வீடுகளின் சுவர்கள் கூட விரிசல் விழுகிறது.

கல்குவாரி

இதுபோன்ற கல்குவாரிகளை இயக்க முறையாக அரசு அனுமதியும் பெறுவதில்லை. முறைகேடாக நடைபெறும் கல்குவாரிகளால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் உயிருக்கு பாதுகாப்பும் இல்லை. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கூட குண்டல்பேட்டை அருகே கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் பாறைகள் சரிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு பெயரளவில் நிவாரணம் கொடுத்து, போலீஸையும் சரிகட்டி விடுவதால் இவர்களின் குடும்பம் அனாதையாகிறது. எனவே, கல்குவாரிகள் இயங்குவதை முறைப்படுத்த வேண்டும்” என்றார்.
இந்த விபத்து குறித்து சாம்ராஜ் நகர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/ApMT5LK

Post a Comment

0 Comments