மும்பை: லைவ் செய்து கொண்டிருந்த தென்கொரிய பெண் யூடியூபர்... எல்லைமீறிய வாலிபர்கள் கைது!

உலகம் முழுவதும் யூடியூப் சேனல்கள் மூலம் சம்பாதிப்பது என்பது அதிகரித்திருக்கிறது. சிலர் யூடியூப் வீடியோவிற்காக பல கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்வதுண்டு. மும்பைக்கு தென்கொரியாவை சேர்ந்த பெண் யூடியூபர் ஒருவர் வந்திருந்தார். அவருக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டிருக்கிறது.

மும்பை கார்ரோடு பகுதியில் நேற்று இரவு மியோசி என்ற தென்கொரிய பெண் யூடியூபர் தன் சேனலுக்கு வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியை அவர் நேரடியாக ஒளிபரப்பிக்கொண்டிருந்தார். அந்த நேரம் அங்கு வந்த வாலிபர் ஒருவர், `உன்னுடைய வயது என்னவென்று கேட்டார். அதோடு அந்தப் பெண்ணின் கையை பிடித்து இழுத்து, `வண்டிக்கு வா’ என்று அழைக்கிறார். அந்த பெண் `முடியாது முடியாது ’என்று கூறுகிறார். உடனே அப்பெண் அங்கிருந்து சென்றார்.

அப்படியும் விடாத அந்த வாலிபர் பைக்கில் தனது நண்பரை அழைத்துக்கொண்டு அந்தப் பெண்ணிடம் வந்து, `லிஃப்ட் தரவா?’ என்று கேட்டார். ஆனால் அந்த பெண் தனக்கு லிஃப்ட் தேவையில்லை என்றும் தன்னுடைய வீடு மிகவும் அருகில்தான் இருக்கிறது' என்றும் அரைகுறை ஆங்கிலத்தில் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோவை அப்பெண் சோசியல் மீடியாவில் வெளியிட்டு `இது போன்ற நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் தண்டிக்கப்படாமல் விடக்கூடாது' என்று குறிப்பிட்டு இருந்தார்.

பெண்ணின் கையை பிடித்து இழுத்த இரண்டு பேர்

இரண்டாவதாக வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ``ஒருவர் என்னை துன்புறுத்தினார். குற்றவாளியுடன் வேறு ஒரு நபரும் இருந்ததால் நான் பிரச்னையை பெரிதாக்க விரும்பாமல் இருந்தேன். நான் பொதுமக்களுடன் மிகவும் நெருங்கிப்பழகியதால்தான் இது போன்று நடந்ததாக சிலர் சொல்கின்றனர்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோவை பார்த்த போலீஸார் தாங்களே வழக்கு பதிவு செய்து, இந்த காரியத்தில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களையும் கைது செய்தனர். அவர்களின் பெயர் மொபீன் சந்த் மொகமத் மற்றும் மொகமத் சஹீப் என்று தெரிய வந்தது. அவர்கள் மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/auGbrtl

Post a Comment

0 Comments