தமிழக-கேரள எல்லை இன்னும் 822 கிலோ மீட்டர் தூரம் அளவீடு செய்யப்படாமல் இருக்கிறது. இந்நிலையில், கேரள அரசு தங்கள் மாநில வரைபடத்தை முழுமைப்படுத்த இருப்பதாகக் கூறி, நவம்பர் 1-ம் தேதி முதல் டிஜிட்டல் ரீ சர்வே எடுக்கும் பணியைத் தொடங்கியுள்ளது. இதனால் தமிழக-கேரள எல்லையில் வாழும் தமிழர்கள் அதிமாக பாதிக்கப்படுவார்கள் என டிஜிட்டல் ரீ சர்வே திட்டத்துக்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மூணாறு நகரிலிருந்து மாட்டுப்பட்டி செல்லும் வழியிலுள்ள இக்கா நகரில் 60 குடியிருப்புவாசிகள், `நவம்பர் 29-ம் தேதிக்குள், தங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு வீட்டை காலி செய்ய வேண்டும். இல்லையேல் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்படும்' என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு தேவிகுளம் வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தேவிகுளம் தொகுதியில் 15 ஆண்டுகள் தொடர்ந்து எம்.எல்.ஏ-வாக இருந்த ராஜேந்திரனின் வீடும் இந்த இக்கா நகரில்தான் இருக்கிறது. அவர் உட்பட தமிழர் வாழும் பகுதியான இக்கா நகரில் பலருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தமிழர்கள் வாழும் பகுதிகளையும், அவர்களுடைய சொத்துகளையும் அபகரிக்கும் நோக்கில் கேரள அரசு டிஜிட்டல் ரீ சர்வே என்கிற பெயரில் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டிஜிட்டல் ரீ சர்வே அறிவிக்கப்பட்டது முதல் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கத்திடம் பேசினோம். ``கடந்த 140 ஆண்டுகளாக செப்பனிட்டு மூணாறு நகரை உருவாக்கியவர்கள் தமிழர்கள். அங்கு ஆக்கிரமிப்பு கட்டடங்கள் பல இருக்கும் நிலையில், தமிழர்கள் குடியிருப்புகளை குறிவைத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள், மூணாறு பஞ்சாயத்துக்கு முறையாக வரி செலுத்துகிறார்கள். முறைப்படி மின் இணைப்பும் பெற்றிருக்கிறார்கள். 25 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறார்கள். சட்டரீதியான பாதுகாப்பு அவர்களுக்கு இருக்கும் நிலையில், எதன் அடிப்படையில் 10 நாள்கள் அவகாசத்தில் வீடுகளை கேரள வருவாய்த்துறையால் இடிக்க முடியும்.
மூணாறு நகரிலுள்ள கேரள மக்களும் ஆக்கிரமிப்பு செய்துதான் ஏராளமான கட்டடங்களை கட்டியிருக்கிறார்கள். குமுளியிலிருந்து வண்டிப் பெரியாறு வரை சாலையில் இருபுறமும் நூற்றுக்கணக்கில் கட்டப்பட்டிருக்கும் வீடுகள், முற்றிலுமாக தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடுகள்தான். அந்த வீடுகளுக்கு எப்போது நோட்டீஸ் கொடுக்கப் போகிறார்கள்... எப்போது இடிக்கப் போகிறார்கள் என்பதையும் அறிவிக்க வேண்டும். அவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்காமல், மூணாறு நகரை உருவாக்கிய தமிழர்களுக்கு மட்டும் நோட்டீஸ் கொடுத்திருப்பது சட்டவிரோதம். எனவே கேரள வருவாய்த்துறை இக்கா நகரை இடிக்கப் போகிறோம் என்கிற தன்னுடைய உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
கேரள அரசின் இந்த செயல்பாடுகள் படிப்படியாக தேவிகுளம், பீர்மேடு, உடுமஞ்சோலை ஆகிய தாலுகாக்களிலிருந்து, தமிழர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளின் ஒரு பகுதிதான் என்பதை தமிழக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்" என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/iqVQgOr
0 Comments