கேரள மாநிலத்தில் ஆளுநருக்கும், முதல்வருக்குமான மோதல் தொடர்ந்து வருகிறது. ஆளுநர் பதவியின் கண்ணியத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசினால், அமைச்சர்களின் பதவியை திரும்பப்பெறுவேன் என ஆளுநர் ஆரிப் முஹம்மதுகான் ஏற்கனவே அறிவித்து பரபரப்பை கிளப்பினார். அடுத்ததாக 11 துணை வேந்தர்கள் நியமனத்தில் யு.ஜி.சி விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை எனக்கூறி அவர்களை பதவி விலக வேண்டும் என ஆளுநர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
இந்த நிலையில், தன்னிடம் தெரிவிக்காமல் முதல்வர் பினராயி விஜயன் வெளிநாட்டுக்கு அரசு முறை பயணமாக சென்றுவந்ததாக பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கு ஆளுநர் ஆரிப் முஹம்மதுகான் கடிதம் எழுதி பரபரப்பை கிளப்பியிருக்கிறார். முதல்வர் பினராயி விஜயன் கடந்த மாதம் 3-ம் தேதி முதல் 13-ம் தேதிவரை கனடா, இங்கிலாந்து, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்தார். முதல்வருடன் அமைச்சர்களான வி.சிவன்குட்டி, பி.ராஜிவ், வீணா ஜார்ஜ் உள்ளிட்ட நான்கு அமைச்சர்கள் சென்றிருந்தனர். வெளிநாட்டு பயணம் பற்றி முதல்வர் பினராயி விஜயன் தன்னிடம் தெரிவிக்கவில்லை என ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஆளுநர் ஆரிப் முஹம்மதுகான் கடிதம் எழுதியிருப்பது அரசுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆளுநர் ஆரிப் முஹம்னதுகான் எழுதிய கடிதத்தில், "முதல்வர் பினராயி விஜயன் வெளிநாட்டுக்குச் சென்ற சமயத்தில் ஆளுநர் என்ற முறையில் என்னிடம் முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை. இது சட்டத்தை மீறும் செயலாகும். பிரதமர் வெளிநாட்டுக்குச் செல்லும் முன்பு ஜனாதிபதியையும், முதல்வர் வெளிநாட்டுக்குச் செல்லும் முன்பு ஆளுநரையும் நேரில் சந்தித்து பயணம் குறித்தும், அதன் முக்கிய அம்சம் குறித்தும் தெரிவிக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து வந்த பிறகும் நேரில் சந்தித்து பயணத்தினால் ஏற்பட்ட பலன்கள் குறித்து தெரிவிக்கவேண்டும். ஆனால் பத்து நாள்கள் நான்கு நாடுகளுக்கு சென்றுவந்த பினராயி விஜயன் என்னை சந்தித்து பேசவில்லை. அவர் வெளிநாடு செல்லும்போது பொறுப்பு முதல்வர் யார் என என்னிடம் அறிவிக்கவில்லை. எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே முதல்வர் பினராயி விஜயன் வெளிநாட்டு பயணம் பற்றி மத்திய வெளியுறவுத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என கேரளாவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் முரளிதரன் கூறியிருந்தார். இதையடுத்து பினராயி விஜயன் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்றதற்கான கடிதம் வெளியிடப்பட்டது. அதன் பிறகு முரளிதரன் அமைதியானார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளிநாடுகளுக்க்கு செல்லும்போது முதல்வர் பதவிக்கு என பொறுப்பாக யாரையும் நியமிப்பது வழக்கம் இல்லை என கூறப்படுகிறது. பினராயி விஜயன் இரண்டுமுறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டபோதும் தகவல் தெரிவிக்கவில்லை என ஆளுநர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் கடிதம் குறித்து முதல்வர் தரப்போ, ஆளும் சி.பி.எம் தரப்போ இதுவரை பதில் கூறவில்லை. மேலும், இதுகுறித்து பினராயி விஜயன் தரப்பு உச்ச நீதிமன்ற வழக்கறிஞரிடம் சட்ட ஆலோசனை கேட்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
from தேசிய செய்திகள் https://ift.tt/BaSmni2
0 Comments