கர்நாடக மாநிலம், மங்களூரில் கடந்த, 19-ம் தேதி ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. குக்கர் குண்டு தயாரித்து எடுத்துச்சென்ற முகமது ஷாரிக் (24) படுகாயங்களுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரின் வீட்டில் சோதனை செய்து பேட்டரிகள், சல்பர், பாஸ்பரஸ், சர்கியூட், ஆணிகள், போல்ட் நட் உட்பட வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தும் பல பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், ஷாரிக்குக்கு உதவிய மற்றும் தொடர்பில் இருந்ததாக, ஊட்டியில் ஒருவர், கர்நாடக மாநிலம் மைசூரில் இருவர், மங்களூரில் ஒருவர் என, நான்கு பேர் கைதுசெய்யப்பட்டு, 60-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியிருக்கிறது கர்நாடக போலீஸ். வழக்கை என்.ஐ.ஏ வசம் ஒப்படைத்த நிலையில், அவர்களுடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றவாளியிடம் இன்று முதல் விசாரணை!
ஷாரிக் பிடிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை, 9-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கொண்ட குழு, அவருக்கு தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். இதனால், அவரிடம் விசாரணை நடத்த முடியாத சூழல் நிலவியது.
இருந்தாலும் ஷாரிக்கிடம் பறிமுதல் செய்யப்பட்ட மொபைல், டைரி, ஆவணங்களை சோதனை செய்ததில், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் அவர் பயிற்சி பெற்று, 40 பேருக்கு மேல் ஷாரிக் பயிற்சி கொடுத்தது தெரியவந்தது. முகமது ஷாரிக் விசாரணைக்கு ஒத்துழைக்கும் அளவுக்கு குணமாகியிருப்பதால், இன்று காலை முதல் கர்நாடக போலீஸார் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், அவர் ஐ.எஸ்.ஐ.எஸ், அல்கொய்தா மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளுடன் தீவிர தொடர்பில் இருந்தது தெரியவந்திருக்கிறது. மேலும், அவர் ‘டார்க் வெப்சைட்’ வாயிலாக உளவுத்துறை கண்டுபிடிக்க முடியாத வகையில், பயிற்சி பெற்றதும், அதன் வாயிலாக மற்றவர்களுக்கு பயிற்சி கொடுத்ததும் தெரியவந்திருக்கிறது.
‘கரன்சி எக்ஸ்சேஞ்ச்’ செய்து நிதி!
இது குறித்து கர்நாடக போலீஸார் சிலரிடம் பேசினோம், ``முகமது ஷாரிக், வெளிநாடுகளிலுள்ள பயங்கரவாத அமைப்புகள் மட்டுமின்றி, தமிழ்நாடு, கேரளா, மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களிலிருந்தும் நிதியுதவி பெற்றிருக்கிறார். இந்தியாவில் சிலர் ‘பிட் காயின்’ மற்றும் ‘கரன்சி எக்ஸ்சேஞ்ச்’ மூலம் சட்ட விரோதமாக பண பரிவர்த்தனை செய்வது போல, பயங்கரவாத அமைப்புகள் ஒதுக்கிய டாலர், தினார் மற்றும் ரியால் கரன்சிகளை, இந்திய பணமாக பெற்றிருக்கிறார். எந்த வகையில் கரன்சி எக்ஸ்சேன்ஜ் செய்தார், அல்லது யார் ‘கரன்சி எக்ஸ்சேன்ஜ்’ செய்து இவருக்கு இந்திய பணம் கொடுத்தனர் என விசாரிக்கிறோம்.
மேலும், இவர் பயிற்சி கொடுப்பதற்காகவும், தகவல்களை அனுப்புவதற்காகவும், மிகவும் பாதுகாப்பான ‘டெலிகிராம், வயர் சீக்ரெட் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம்’, உள்ளிட்ட ஆப்களை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். முதற்கட்ட விசாரணையில், அவர் சிவமோகா, தீர்த்தஹல்லி, பத்திரவதி பகுதிகளில், இளைஞர்களை மூளைச்சலவை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்திருக்கிறது. நாளை (1–ம் தேதி) முதல் என்.ஐ.ஏ முழு விசாரணையை துவங்கும்" என பகீர் தகவல்களைத் தெரிவித்தனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/QmI6Kx3
0 Comments