தென்காசி: மலைவாழ் பெண்களிடம் அத்துமீறிய கேரள வனத்துறை! - வருத்தம் தெரிவித்த அதிகாரி

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பழங்குடியின மக்கள் வசிக்கிறார்கள். சுமார் ஐம்பது குடும்பங்களைக் கொண்ட அவர்கள் அடர்ந்த வனப்பகுதிகளில் கிடைக்கும் மலைத் தேன், குங்கிலியம், , கல்தாமரை, சுண்டைக்காய எடுப்பது மற்றும் கிழங்கு உள்ளிட்ட வன மகசூல் செய்து வருகிறார்கள்.

பழங்குடி இனத்தைச் சேர்ந்த அவர்களில் சிலர் கடந்த 23-ம் தேதி வனப்பகுதிக்குள் சென்று தேன் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு குடியிருப்புக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கேரளாவின் பெரியாறு வனச் சரகத்தைச் சேர்ந்த பணியாளர்கள் சிலர் அந்தக் குழிவில் வந்த பெண்களின் சேலையைப் பிடித்து இழுத்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் காட்டுக்குள் வரக்கூடாது என கேரள வனத்துறை ஊழியர்கள் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

கேரள வனத்துறையினரின் அத்துமீறல் காரணமாக அதிருப்தியடைந்த பழங்குடியினர், இது தொடர்பாக தமிழக வனத்துறையினரிடம் புகார் அளித்தனர். ஆனால், அவர்களோ, தங்களுக்கு கேரள வனத்துறை மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இல்லை என்று தட்டிக் கழித்ததாக கூறப்படுகிறது.

பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம்

அதனால் வனத்துக்குள் தங்களுக்கு நடந்த அநீதிக்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சரசு மற்றும் அவருடன் சென்றிருந்த ராஜா ஆகியோர் வாசுதேவநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனாலும், நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த நிலையில், வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் இது குறித்து கேரள வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து கேரளாவின் பெரியாறு வனக்கோட்ட வனச்சரகர் அகில் பாபு, வாசுதேவநல்லூர் வனச்சரகர் சுரேஷ், பழங்குடி குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 23-ம் தேதி நடந்த சம்பவத்துக்கு கேரள வனச்சரகர் அகில் பாபு வருத்தம் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை

அத்துடன், பாதையைப் பயன்படுத்தும் வகையில் கேரள எல்லைக்குள் வரும் வனக்குடியிருப்பைச் சேர்ந்த மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ள மாட்டோம் என்றும் சோதனை என்ற பெயரில் அத்துமீறல் நடக்காது என்று உறுதியளித்தார். அதை எழுத்துபூர்வமாக கேரள வனத்துறை அதிகாரி அளித்ததால் இந்த விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.



from தேசிய செய்திகள் https://ift.tt/TS8YbkD

Post a Comment

0 Comments