பிரபல தடகள வீராங்கனை பி.டி.உஷா கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே பாலுசேரி பகுதியில் 'உஷா ஸ்கூல் ஆஃப் அத்லட்டிக்ஸ்' என்ற பெயரில் தடகள பயிற்சி பள்ளியை நடத்தி வருகிறார். இங்கு பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் பயிற்சிபெற்று வருகின்றனர். பயிற்சியாளர்களும், பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளும் தங்குவதற்காக பயிற்சி பள்ளி அருகே தங்கும் விடுதியும் உள்ளது. 'உஷா ஸ்கூல் ஆஃப் அத்லட்டிக்ஸ்' பயிற்சி பள்ளியில் உதவி பயிற்சியாளராக கோவையைச் சேர்ந்த ஜெயந்தி(26) கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை 5 மணி அளவில் பயிற்சிக்கு அழைப்பதற்காக சில மாணவிகள் ஜெயந்தியின் அறைக்குச் சென்றுள்ளனர். அப்போதுதான் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதுபற்றி பாலுசேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரின் உடல் பிரேதபரிசோதனைக்காக கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. ஜெயந்தியின் மொபைல் போனை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் சாதனை படைத்த ஜெயந்தி, 2016-ல் தேசிய அளவில் தடகள போட்டிகளில் சாதனை படைத்துள்ளார். பி.டி.உஷா மேல்சபை எம்.பி-யாக பொறுப்பேற்ற சமயத்தில் பயிற்சிப்பள்ளியின் பொறுப்புக்களை ஜெயந்தி முன்னின்று கவனித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவரின் மரணம் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக பி.டி.உஷா தெரிவித்துள்ளார். இதுபற்றி பேசிய பி.டி.உஷா, "கடந்த இரண்டு மாதங்களாக ஜெயந்தி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். பயிற்சிபெறும் குழந்தைகளிடம் இருந்து நல்ல ரிசல்ட் கிடைத்தது. இரண்டு மூன்று நாட்களுக்கு முன் அவரின் போட்டோ செய்தித்தாள்களில் வந்ததை பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் அவர் இப்படி செய்வார் என நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கே அதிர்ச்சியாக உள்ளது. அவரின் பர்சனல் விஷயங்களில் நான் தலையிடுவது இல்லை. முந்தின நாள் இரவு வரை பயிற்சிகுறித்து அதிகமாக பேசிக்கொண்டிருந்தார். அவரின் பர்சனல் விஷயங்கள் குறித்து யாரிடமும் பகிர்ந்ததில்லை" என்றார்.
இது ஒருபுறம் இருக்க உஷா ஸ்கூல் ஆஃப் அத்லட்டிக்ஸ் பயிற்சி பள்ளியில் பயிற்சியாளர்களும், மாணவர்கள் பலரும் மன அழுத்தத்தில் இருந்ததாக ஏற்கனவே தகவல் கசிந்தது. இந்த நிலையில் உதவி பயிற்சியாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்துக்கு அதுபோன்ற காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/1c24Pg3
0 Comments