கர்நாடக மாநிலம், சாம்ராஜநகர் மாவட்டத்தில், வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியொன்றில் ஒன்றில் உதவிகேட்டு வந்த பெண்ணை, பா.ஜ.க-வைச் சேர்ந்த வீட்டு வசதி மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் வி.சோமன்னா கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
முன்னதாக, சாம்ராஜநகரில் உள்ள குண்ட்லுப்பேட்டையில் நேற்று மதியம் 2.30 மணியளவில், பா.ஜ.க அமைச்சர் வி.சோமன்னா தலைமையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவதாக இருந்தது. அமைச்சரோ மாலை 6.30 மணிக்கு தான் அங்குவந்தார்.
அப்போது பெண் ஒருவர், தன்னுடைய கோரிக்கையை முன்வைப்பதற்காக அமைச்சரை அணுகினார். ஆனால், திடீரென அமைச்சர் அந்தப் பெண்ணின் கன்னத்தில் அறைந்தார். மேலும், அந்தப் பெண் உடனே, அமைச்சரின் காலில் விழுந்து அழுதார். இதனால் அந்த இடமே பரபரப்பானது. இந்த நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் அமைச்சரின் இத்தகைய செயல், சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலாகிவருகிறது.
அதுமட்டுமல்லாமல், அரசியல் கட்சிகள் இதற்குக் கண்டனம் தெரிவித்துவருகின்றன. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``கர்நாடகாவிலுள்ள பா.ஜ.க அமைச்சர்கள் மற்றும் தலைவர்களுக்கு ஆணவம் தலைக்கேறிவிட்டது. ஒருபக்கம் மக்கள் 40 சதவிகித கமிஷன் எனும் கொடுமைக்கு ஆளாகிறார்கள், மறுபக்கம் பெண்கள் அறையப்படுகிறார்கள். அமைச்சர்கள் அதிகார போதையில் இருக்கின்றனர். எங்கே அமைச்சரைப் பதவிநீக்கம் செய்வீர்களா பசவராஜ் பொம்மை" எனக் கடுமையாகச் சாடியிருக்கிறார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/Fh7JeZq
0 Comments