ஆர்.எஸ்.எஸ் அலுவலகம்மீது பெட்ரோல் குண்டு வீச்சு - கேரளாவில் கலவரமான பாப்புலர் ஃப்ரன்ட் பந்த்!

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ நேற்று அதிரடி சோதனை நடத்தியது. அதில் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள் பலர் கைதுசெய்யப்பட்டனர். கேரளத்தில் சுமார் 50 இடங்களில் சோதனை நடந்தது. பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பின் தேசிய தலைவர் சலாம் உட்பட கேரளத்தில் 19-பேர் கைதுசெய்யப்பட்டனர். இதைக் கண்டித்து கேரள மாநிலத்தில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை வேலை நிறுத்த போராட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பந்த் காரணமாக பல இடங்களில் பேருந்துகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு பஸ் டிரைவர்கள் பலர் ஹெல்மெட் போட்டுக்கொண்டு பஸ்ஸை ஓட்டினர். இதற்கிடையே கண்ணூர் ஆயுர்வேத மருத்துவமனை அருகே பைக்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

கடை அடைக்கச் சொன்னவர்கள்மீது தாக்குதல்

கண்ணூர் மாவட்டம், மட்டன்னூரில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம்மீது பாம் வீசப்பட்டது. அதில் அலுவலக ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. மேலும் சில இடங்களில் நெருப்புகள் விழுந்து எரிந்தன. இரண்டுபேர் பைக்கில் சென்று பாம் வீசிய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன. பாம் வீசிய இரண்டுபேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பய்யனூர் சென்ட்ரல் பஜார் பகுதியில் வியாபாரிகளிடம் கடைகளை அடைக்கும்படி வற்புறுத்திய பி.எஃப்.ஐ நிர்வாகிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியது. கடையை அடைக்கச் சொன்ன நிர்வாகிகள்மீது அந்தப் பகுதியினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் போலீஸார் அங்கு சென்று நான்கு பேரைக் கைதுசெய்தனர். மாநிலம் முழுவதும் பல இடங்களில் அரசு பேருந்துகளும், கடைகளும் உடைக்கப்பட்டன.

பந்த் காரணமாக உடைக்கப்பட்ட பஸ்

இந்த பந்த்தில் ஏற்பட்ட வன்முறையை கேரள ஐகோர்ட் முக்கிய பிரச்னையாக எடுத்து விசாரணை நடத்தியது. பந்த் காரணமாக கேரளாவில் 70 பஸ்கள் உடைக்கப்பட்டுள்ளதாகவும், மதியம் 2 மணி வரை 53 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும். 127 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஐகோர்ட்டில் கேரள அரசு தெரிவித்தது. ``அரசு பஸ்ஸில் கல்லெறிந்தால் கையில் பொள்ளல் ஏற்படும் என உணரும் காலம்வரை இது தொடரும்" என கோர்ட் அதிருப்தி தெரிவித்தது. ``நீதிக்கு பயப்படாமல் இருப்பதால் இதுபோன்ற வன்முறைகள் நடக்கின்றன. வன்முறையால் ஏற்பட்ட இழப்பை பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பிடமிருந்து அரசு வசூலிக்குமா?" எனவும் கோர்ட் கேள்வி எழுப்பியது.



from தேசிய செய்திகள் https://ift.tt/lHAMP6C

Post a Comment

0 Comments