``சசி தரூர் அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கு தகுதியானவர்தான்!" - கேரள மாநில தலைவர் சர்டிஃபிகேட்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் அக்டோபர் மாதம் 17-ம் தேதி நடைபெறும் என சோனியா காந்தி அறிவித்திருந்தார். தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிட்டால் வேறு யாரும் போட்டியிட வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. அதே சமயம் ராகுல் காந்தி போட்டியிட மறுத்தால் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கேரள மாநிலம், திருவனந்தபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சசி தரூர் ஆகியோர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "சசி தரூர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக போட்டியிடுவதாக வந்த செய்தி பற்றி ஏன் ஆச்சர்யப்படுகிறீர்கள். சசி தரூர் தலைவர் பதவிக்குப் போட்டியிட தகுதியான வேட்பாளர்தான்.

கே.சுதாகரன்

இந்திய தேசிய காங்கிரஸ் என்ற ஜனநாயக கட்சிக்குள் போட்டியிட எல்லோருக்கும் உரிமை உண்டு. அந்த உரிமை எனக்கும் உண்டு, சசி தரூருக்கும் உண்டு. போட்டியிடுபவர்களை கட்சி ஏற்றுக்கொள்ளும். ஓட்டு கிடைத்தால் வெற்றிபெறுவார்கள். எனவே சசி தரூர் தலைவராக போட்டியிட தகுதியானவர்தான். சசி தரூர் போட்டியிட விரும்பினால் அதை குறைசொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஜனநாயக முறைப்படி நாங்கள் அதற்கு தீர்வு காண்போம்" என்றார்.

சசி தரூர்

இந்த நிலையில், சசி தரூர் தனது முகநூல் பக்கத்தில் சுவாமி விவேகானந்தரின் பொன்மொழி ஒன்றை பதிவிட்டு, தான் காங்கிரஸ் தலைவராக வர விரும்பவில்லை என சூசகமாக தெரிவித்துள்ளார். சசி தரூர் வெளியிட்டுள்ள சுவாமி விவேகானந்தரின் பொன்மொழி இதுதான், ``எனக்கு சமூக சீர்திருத்தத்தில் மட்டும் நம்பிக்கை இல்லை. சமூக வளர்ச்சியில் எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்தப் பாதையில்தான் நீங்கள் செல்ல வேண்டும்' என்று எந்த வகையிலும் என் சமுதாயத்திற்கு ஆணையிடும் துணிச்சல் என்னிடம் இல்லை. ராமரின் பாலம் கட்டுவதில் பங்களித்த அணில் போல் இருக்க நான் விரும்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/oiwxX0O

Post a Comment

0 Comments