காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர். மத்திய அமைச்சர், இந்திய காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகார குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளையும் வகித்திருக்கிறார் குலாம் நபி ஆசாத். அண்மைக் காலமாகவே காங்கிரஸ் மேலிடத்துடன் அதிருப்தியில் இருந்துவந்த அவர், நேற்று அந்தக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தான் விலகுவதாகவும், புதிய கட்சி தொடங்கும் திட்டத்தையும் அறிவித்திருக்கிறார். இந்த செய்தி காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதைத் தொடர்ந்து, காஷ்மீரின் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கின்றனர். அவர்களில் முன்னாள் மந்திரிகள் ஆர்.எஸ்.சிப், ஜி.எம்.சரூரி, மூத்த தலைவர்கள் சவுத்ரி முகமது அக்ரம், முகமது அமின் பத், குல்சார் அகமது ஆகியோர் முக்கியமானவர்கள்.
மற்றொரு மூத்த தலைவரான சைபுதீன் சோஸ், "குலாம் நபி ஆசாத் பிரச்னைகளை கட்சிக்குள் பேசி தீர்த்து கொண்டிருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியில் அவருக்கு கிடைத்த மரியாதை, வேறெங்கும் கிடைக்காது" என கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரவிருக்கும் ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கான பா.ஜ.க-வின் தயாரிப்புகளை மதிப்பாய்வு செய்ய காஷ்மீரின் பாஜக தலைவர்களை சந்தித்திருக்கிறார். அமித் ஷா-வின் இந்த சந்திப்பில், ஜம்மு பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்தும் முன்னாள் காங்கிரஸின் தலைவர் குலாம் நபி ஆசாத்தின் திட்டங்கள் மற்றும் அதன் தாக்கம், அரசியல் சூழ்நிலை மற்றும் யூனியன் பிரதேசத்தில் பா.ஜ.க-வின் பிரச்னைகள் குறித்து கவனம் செலுத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது காஷ்மீரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி முடிந்த பிறகு, யூனியன் பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடத்தப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது. இருப்பினும், இந்த ஆண்டு தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்றே அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
from தேசிய செய்திகள் https://ift.tt/M5AIChU
0 Comments