தாக்கரே தடுத்தார்; ஷிண்டே செய்கிறார்; அழியும் மும்பையின் நுரையீரல் ஆரே காலனி வனம்; எதற்காக தெரியுமா?

மும்பை, கொலாபாவில் இருந்து பாந்த்ரா-குர்லா காம்ப்ளஸ் வரை பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில் செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக மும்பையின் நுரையீரலாக கருதப்படும் கோரேகாவ் ஆரே காலனி வனப்பகுதியில் கார் ஷெட் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். இப்பிரச்னை உச்ச நீதிமன்றம் வரை சென்றது. ஆனால், நீதிமன்றம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தேவையான மரங்களை வெட்ட அனுமதித்தது.

ஆரே காலனி வனம்

2019-ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுடன் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட்டன. மும்பை மாநகராட்சி நிர்வாகம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 2,700 மரங்களை வெட்ட அனுமதி கொடுத்துள்ளது. திட்டத்திற்கு தேவையான மரங்கள் வெட்டப்பட்டு பணிகள் தொடங்கிய நிலையில் மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. புதிய முதல்வராக பதவியேற்ற உத்தவ் தாக்கரே ஆரே காலனியில் மெட்ரோ ரயிலுக்கு கார்ஷெட் அமைக்கும் திட்டத்திற்கு தடை விதித்ததோடு கட்டுமான பணிகளையும் நிறுத்தினார்.

ஆரே காலனி வனம்

இதனால் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான எதிர்காலம் கேள்விக்குறியானது. தற்போது மீண்டும் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அரசு பதவியேற்றுள்ளது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றவுடன் ஆரே காலனியில் மெட்ரோ ரயில் பணிகளை உடனே தொடங்கும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து மெட்ரோ ரயில் பணிகள் ஆரே காலனியில் தீவிரம் அடைந்திருக்கிறது. உடனே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆரே காலனியில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். சிவசேனா இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரேயும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டார்.

ஆனால் மாநில அரசு தனது முடிவில் உறுதியாக இருந்தது. மெட்ரோ ரயில்கள் சோதனை ஓட்டத்திற்காக ஆரே காலனிக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது. இதற்காக ஆரே காலனி வனப்பகுதிக்குள் செல்லும் சாலையோரம் இருக்கும் மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. அதோடு சாலையோரம் இருக்கும் மரங்களின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டு வருகிறது. இதற்காக மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் திடீரென ஆரே காலனிக்குள் செல்லும் சாலையை இரவோடு இரவாக மூடிவிட்டனர். 24 மணி நேரத்திற்கு சாலை மூடப்பட்டு இருந்தது. ஆரே காலனிக்கு செல்லும் அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டு நுழைவு வாயிலில் போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆரே காலனியை சேர்ந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

ஆரே காலனி மெட்ரோ ரயில் திட்டம்

மரங்களை வெட்டும்போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்பதற்காக, ஆரே காலனிக்குள் செல்லும் சாலையை மூடிவிட்டு மரங்களை வெட்டியுள்ளனர். ஏற்கனவே ஆரே காலனி பிக்னிக் பாயிண்ட் பகுதியில் எந்தெந்த மரங்களை வெட்டவேண்டும் என்பது குறித்து மெட்ரோ ரயில் கழக அதிகாரிகள் அடையாளம் கண்டு இருந்தனர். தேவையான அனுமதி பெற்றே மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டதாக மும்பை மெட்ரோ ரயில் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் சட்டவிரோதமாக போலீஸ் பாதுகாப்புடன் ஆரே காலனிக்குள் இருக்கும் மரங்களை வெட்டி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மும்பை நகரின் மையப்பகுதியில் இருக்கும் ஆரே காலனி வனப்பகுதி 1,287 ஹெக்டேர் நிலப்பரப்பு கொண்டது ஆகும். ஆரே காலனியோடு சேர்ந்து சஞ்சய் காந்தி தேசிய பூங்கா இருக்கிறது. இதில் வசிக்கும் சிறுத்தைகள் அடிக்கடி ஆரே காலனிக்குள் வந்து விடுவதுண்டு.

மெட்ரோ ரயில் பணிகாக மரங்கள் வெட்டப்பட்ட காட்சி

ஆரே காலனி வனப்பகுதியில் அதிக அளவில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் வசிக்கும் பகுதிக்குள் அடிக்கடி சிறுத்தைகள் புகுந்து விடுவதுண்டு. இந்தச் சூழலில்தான் சுற்றுச்சூழலை பாதுகாக்க வனப்பகுதியில் மரங்களை வெட்டக்கூடாது என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/VsS9btU

Post a Comment

0 Comments