வழக்கிலிருந்து ஆர்யன் கான் விடுவிக்கப்பட்டது எப்படி... அதிகாரி சமீர் வான்கடே மீது நடவடிக்கை?!

நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் கடந்த ஆண்டு மும்பையில் சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு ஒரு மாதம் வரை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அதன் பிறகே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவ்வழக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே விசாரணை நடத்தினார். ஆனால் அவர் மீது மிரட்டி பணம் பறித்தல் புகார் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்ததால் அவர் இவ்வழக்கு விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஆர்யன் கான் வழக்கில் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு விசாரணை குழு நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில் ஆர்யன் கான், உட்பட 6 பேரின் பெயர்கள் இடம் பெறவில்லை. அவர்களுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்பதால் அவர்கள் பெயர் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெறவில்லை எனக் கூறப்பட்டது. இவ்வழக்கை முன்னர் சமீர் வான்கடே சரியாக விசாரிக்காததுதான் ஆர்யன் கான் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆர்யன் கான்

இதையடுத்து சரியாக இவ்வழக்கை விசாரிக்காத சமீர் வான்கடே மீது நடவடிக்கை எடுக்கும் படி மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக கலால் மற்றும் சுங்க வரித்துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சமீர் வான்கடே தனது சாதிச்சான்றிதழிலும் மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்யன் கான் விடுவிக்கப்பட்டது எப்படி?

ஆர்யன் கான் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது என்பது தொடர்பாக குற்றப்பத்திரிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு விசாரணையும் சரியான முறையில் கையாளப்படவில்லை. ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்துவதாக வந்த புகாரை தொடர்ந்து நடந்த ரெய்டின் போது சமீர் வான்கடே அதனை வீடியோ எடுக்கவில்லை. ஆர்யன் கானிடம் போதைப்பொருளும் பிடிபடவில்லை. அதோடு ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பதையும் அதிகாரிகளால் உறுதிபடுத்த முடியவில்லை.

இவ்வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டு இருந்தவர்களும் பல்டி அடித்துவிட்டனர். சாட்சியாக சேர்க்கப்பட்டு இருந்த பிரபாகர் என்பவர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் அளித்த வாக்குமூலத்தில் ரெய்டின் போது தான் சம்பவ இடத்தில் இல்லை, சமீர் வான்கடே மற்றும் அதிகாரிகள் தன்னிடம் வெற்று பேப்பரில் கையெழுத்து போடும்படி கேட்டுக்கொண்டதாக குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆர்யன் கான் நண்பர் அர்பாஸ் மெர்ச்சண்ட் அளித்துள்ள வாக்குமூலத்தில் தான் ஆர்யன் கானுக்காக போதைப்பொருள் கொண்டு வரவில்லை என்று தெரிவித்துள்ளார். அதோடு ஆர்யன் கான் தன்னிடம் போதைப்பொருளை எடுத்து வராதே என்று என்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் அர்பாஸ் தெரிவித்துள்ளார். இதனால் ஆர்யன் கானுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியாமல் போய்விட்டது.

ஆர்யன் கான்

ஆர்யன் கான் வாட்ஸ்ஆப் சாட்டிங்கில் சர்வதேச போதைபோருள் கடத்தல் கும்பலுடன் பேசியிருப்பதாகவும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் சேர்ந்து சதி செய்ததாகவும் சமீர் வான்கடே தெரிவித்திருந்தார். ஆனால் இதில் சரியான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று புதிய குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொபைல் போனை பறிமுதல் செய்ததில் கூட சரியான சட்டநடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் வாட்ஸ்ஆப் உரையாடல்களை முதன்மை சாட்சியமாக கருத முடியாது என்றும், இதனை சுப்ரீம் கோர்ட்டே பல முறை தெரிவித்திருப்பதாகவும் இவ்வழக்கை விசாரித்த டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி சஞ்சய் சிங் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதோடு குற்றப்பத்திரிக்கையில் அனைவர் மீதும் போதைப்பொருள் வைத்திருந்தல், பயன்படுத்துதல் என ஒரே பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதையும் குற்றப்பத்திரிக்கை கேள்வி எழுப்பி இருக்கிறது. தற்போது குற்றப்பத்திரிக்கையில் குற்றவாளிகளை 7 பிரிவாக பிரித்து அவர்கள் மீது தனித்தனியாக குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது.



from தேசிய செய்திகள் https://ift.tt/uBloW3q

Post a Comment

0 Comments