வட அமெரிக்காவில் இருந்து சர்வதேச கூரியர் மூலம் மும்பைக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக விமான புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் அமெரிக்காவில் இருந்து கூரியரில் வரும் சரக்குகளை தீவிரமாக கண்காணிக்க ஆரம்பித்தனர். இதில் கலிபோர்னியாவில் இருந்து கூரியரில் வந்த ஏர் பியூரிபையர் ஒன்றை சோதனை செய்ததில் உள்ளே 910 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து வட அமெரிக்காவில் இருந்து வந்த மேலும் மூன்று பார்சல்களை சோதனை செய்ததில் போலி லெதர் இருக்கை, டேபிள் போன்ற வீட்டு உபயோகப்பொருள்களில் மறைத்து வைத்து எடுத்து வரப்பட்ட 27 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விமான நிலைய சர்வதேச கார்கோ கமிஷனர் அலுவலகம் செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மிகவும் தரம் வாய்ந்த ஒன்றாகும். இந்த கஞ்சா மும்பை மார்க்கெட்டில் ஒரு கிராம் 3 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. கஞ்சாவை பறிமுதல் செய்த பிறகு அதில் வேறு பொருளை வைத்து சம்பந்தப்பட்ட முகவரிக்கு பார்சல் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பிறகு குற்றவாளிகளை கைது செய்ய சுங்க அதிகாரிகள் அந்த முகவரியில் டெலிவரி பாயாகவும், ஆட்டோ டிரைவராகவும் பணியாற்றினர். ஒரு முகவரியில் டெலிவரி செய்யப்பட்ட பார்சலை அந்த முகவரியில் இருந்த நபர் வேறு ஒரு முகவரிக்கு அனுப்பி வைத்தார். புதிய முகவரிக்கு பார்சல் போய் சேர்ந்தவுடன், அந்த முகவரிக்கு வேறு ஒருவர் வந்து பார்சலை வாங்கிச்சென்றார். உடனே சுங்க இலாகா அதிகாரிகள் அவனை பிடித்து விசாரித்ததில் அவன் தான் இந்த கஞ்சா கடத்தலில் முக்கிய குற்றவாளி என்று தெரிய வந்தது. அதோடு அவனிடம் விசாரித்து மேலும் 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ரூ.14 கோடிக்கு கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்து மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
கலிபோர்னியாவில் கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு அதிக அளவில் கஞ்சா பயிரிட ஆரம்பித்துள்ளனர். எனவே கலிபோர்னியாவில் கஞ்சா விலை சரிந்துள்ளது. இதனால் கலிபோர்னியாவில் இருந்து இந்தியா உட்பட தேவையிருக்கும் நாடுகளுக்கு கஞ்சாவை சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்து வருகின்றனராம்.
from தேசிய செய்திகள் https://ift.tt/BS124iy
0 Comments