‘சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையம்’ ஒவ்வோர் ஆண்டும் உலக பாரம்பர்ய நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் மற்றும் நீர் சேமிப்பு விருதுகளை அறிவித்து வருகிறது. இதற்கு இந்திய தேசிய நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் குழுமமானது ஒவ்வோர் ஆண்டும் தகுதியான பரிந்துரைப் பட்டியலை அனுப்புகிறது. அந்தவகையில், தமிழக நீர்வளத்துறை சார்பில் கல்லணை, காளிங்கராயன் அணைக்கட்டு, வீராணம் நீர்த்தேக்கம், பேச்சிப்பாறை அணை, மதுராந்தகம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய 6 நீர்த்தேக்கக் கட்டமைப்புகளை பரிந்துரைத்து விண்ணப்பித்தது. அதையடுத்து சர்வதேச நீர்ப்பாசன மற்றும் வடிகால் ஆணையத்திலிருந்து வந்த ஆய்வுக்குழுவினர், சம்பந்தப்பட்ட நீர்ப்பாசன கட்டமைப்புகளை நேரில் ஆய்வு செய்துவிட்டுச் சென்றனர்.
இந்நிலையில், கல்லணை, வீராணம் ஏரி மற்றும் காளிங்கராயன் அணைக்கட்டு ஆகிய மூன்றையும் உலக பாரம்பரிய நீர்ப்பாசன கட்டமைப்புகளுக்கான விருதுகளுக்கு தேர்வு செய்து அறிவித்துள்ளனர். இந்த ‘சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையம்’ ஆனது ஒவ்வொரு நாட்டிற்கும் ஆண்டுதோறும் 4 விருதுகள் வழங்குகின்றன. அந்தவகையில் 2021-ம் ஆண்டிற்கு இந்தியாவிற்கு 4 விருதுகள் அறிவிக்கப்பட்டதில், 3 விருதுகள் தமிழகத்திற்கே கிடைத்திருப்பது மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்டச் செயலாளர் மா.பொ.சின்னதுரையிடம் பேசினோம். “தமிழகத்திலுள்ள 3 நீர்ப்பாசன கட்டமைப்புகளுக்கு இந்த சர்வதேச விருது கிடைத்திருப்பது என்பது பெருமை வாய்ந்த விஷயம் ஆகும். நம்முடைய முன்னோர்கள் உலகத் தரம் வாய்ந்த பல கட்டுமானங்களைச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தின் பெருமையை உலகிற்கு தெரியப்படுத்தியவர் கல்லணையை கட்டிய நம்முடைய கொள்ளுப் பாட்டன் மாமன்னன் கரிகாலன். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தண்ணீரைத் தேக்கி சேகரித்துப் பிரித்து, மேட்டுப்பாங்கான இடத்திற்கு கொண்டு சென்று விவசாயத் தொழில், உணவு உற்பத்தி, குடிநீர் ஆதாராங்கள் போன்றவை மேம்படச் செய்திருக்கிறார். அதற்குப் பிறகுதான் தமிழகத்தில் இருக்கும் மற்ற அணைகள் எல்லாம் கட்டப்பட்டன. கல்லணை தமிழனுக்கு கிடைத்த பெருமை. அதற்கு தற்போது கிடைத்திருக்கும் இந்த சர்வதேச விருது, காலம் தாழ்த்திக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் மகிழ்ச்சி பாராட்டத்தக்கது.
அதேவேளையில் இப்போது நீர் சேமிப்பு விஷயத்திலும், நீர்வளத்தைப் பாதுகாப்பதற்காகப் போடப்படும் அரசாணைகளுக்கும், மத்திய - மாநில அரசுகளின் செயல்பாடுகளுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது. நீர்வளங்களை, சுற்றுச்சூழலை, வனத்தை, காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என அரசாங்கமே அரசாணைகளை வெளியிடுகிறது. ஆனால், அதிகாரிகளே நீர்வழிப் பாதைகளில் இருக்கின்ற ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அக்கறை காட்ட மறுக்கிறார்கள். ஆக்கிரமிப்புகளுக்கு உடந்தையாக இருக்கிறார்கள் அதிகாரிகள். குறிப்பாக காவிரி பாசனப் பகுதியில் திருச்சி நகரத்தைச் சுற்றியுள்ள 13 ஏரிகளை தற்போது விரிவாக்கம் மற்றும் மேம்பாடு என்ற பெயரில் அழித்துக்கொண்டு இருக்கிறார்கள். எல்லா அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அதை வேடிக்கைத்தானே பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இதெல்லாம் நீர்ப்பாசனக் கட்டமைப்புகளை காப்பாற்றும் செயலா? ஒருபக்கம் காவிரி - குண்டாறு திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
மத்திய அரசு மேக்கேதாட்டூவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. மேக்கேதாட்டூ அணை கட்ட கர்நாடக சட்டப் பேரவையில் நிதி ஒதுக்கி வேலையை ஆரம்பிக்க இருக்கிறார்கள். ஏற்கனவே தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய 177 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக அரசு தர மறுக்கிறது. இப்போது மேக்கேதாட்டூ அணையைக் கட்டி தண்ணீரை தேக்கி வைக்கப் போகிறார்கள். அப்படி நடந்தால் காவிரியில் எப்படி தண்ணீர் வரும்?... கல்லணையில் எப்படி தண்ணீர் நிற்கும்?... ஒருகாலத்தில் கல்லணை கால்வாய் என்று ஒன்று இருந்தது என்ற வரலாற்றைத் தான் சொல்ல முடியும். கல்லணை பயன்பாடின்றிப் போகும்.
தமிழக அரசும் ‘தீர்மானம் போடுகிறோம்’ என இந்த விஷயத்தை மேலோட்டமாகக் கையாள்கிறார்கள். ஏன் இதை மக்கள் போராட்டமாக மாற்றவில்லை. ஜல்லிக்கட்டுப் போராட்டம் மக்கள் போராட்டமாக இருந்தாலும், அதற்கு அரசாங்கமும் ஆதரவு தெரிவித்ததால் தான் வெற்றியடைந்தது. இப்போது இந்த காவிரி விவகாரத்தை மக்கள் போராட்டமாக மாற்ற அரசு ஏன் உடன்படவில்லை. மத்திய அரசும், மாநில அரசும், நீதிமன்றங்களும் இரட்டை வேடம் போடுவதை முதலில் நிறுத்த வேண்டும். அப்போதுதான் இந்த நீர்ப்பாசனக் கட்டமைப்புகளை எல்லாம் காப்பாற்ற முடியும்” என்றார்.
இதுவும் சரிதான். வெறுமனே விருதை மட்டும் வைத்துகொண்டு என்ன செய்வது?
from தேசிய செய்திகள் https://ift.tt/80M1xO7
0 Comments