2022 மார்ச்சில், நடந்த உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளும் பா.ஜ.க-வே ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. மேலும் இந்தத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி 111 இடங்களில் வென்று சட்டப்பேரவை எதிர்க்கட்சியானது. அதேசமயம், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது. இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சி மிஸ்ரா, கட்சியின் ஒரே எம்.எல்.ஏ உமா சங்கர் சிங் ஆகியோர் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சென்று சந்தித்திருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, சமாஜ்வாடி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ், ``பா.ஜ.க மாயாவதியை குடியரசுத் தலைவராக்க விரும்புகிறதா என்பதை இப்போது பார்க்க வேண்டும்" என்று மாயாவதியை விமர்சித்திருந்தார். தன் மீதான அகிலேஷ் யாதவின் விமர்சனத்துக்குப் பதிலளித்த மாயவாதி, ``நான் குடியரசுத் தலைவராக வேண்டும் என்று கனவு காணவில்லை, நாட்டின் பிரதமராக வேண்டுமென்றே கனவு காண்கிறேன்" எனக் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடத்தில் பேசிய மாயாவதி, ``எங்கள் ஆட்சிக் காலத்தில் எழுப்பப்பட்ட நினைவுச்சின்னங்கள், சமாஜ்வாடி, பா.ஜ.க அரசாங்கங்களால் புறக்கணிக்கப்பட்டன. இது குறித்து மாநில அரசின் கவனத்தை ஈர்க்கவே, எஸ்.சி மிஸ்ரா தலைமையில் பகுஜன் சமாஜ்-ன் பிரதிநிதிகள் முதல்வரை சந்திக்கச் சென்றனர். உத்தரப்பிரதேசத்தில் நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கான வழி தெளிவாக இருக்கும்போது, என்னை குடியரசுத் தலைவராக்கும் கனவை சமாஜ்வாதி கட்சி மறந்துவிட வேண்டும். நான் குடியரசுத் தலைவராக வேண்டும் என்று கனவு காணமாட்டேன். ஏனெனில் நான் போராட்டத்தையே விரும்புகிறேனே தவிர... நிம்மதியான வாழ்க்கையை அல்ல. மீண்டும் நான் உத்தரப்பிரதேசத்தின் முதல்வராகவும், நாட்டின் பிரதமராகவும் ஆகவே கனவு காண்கிறேன்" என்று கூறினார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/XP6S0IJ
0 Comments