மும்பை: தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்ற நபர்; ரயிலை நிறுத்திக் காப்பாற்றிய ஓட்டுநர்!

மும்பையிலுள்ள சிவ்ரி ரயில் நிலையத்துக்கு அருகில் ஒருவர் ரயில் தண்டவாளத்தைக் கடந்தபோது திடீரென தண்டவாளத்தில் படுத்துக்கொண்டார். அவர் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்தில் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டதாகத் தெரிகிறது. அந்த நேரம் புறநகர் ரயில் ஒன்று வேகமாக வந்தது. ரயில் தூரத்தில் வந்தபோதே அதன் மோட்டார்மேன் தண்டவாளத்தில் ஒருவர் கிடப்பதைப் பார்த்துவிட்டார். அதையடுத்து, உடனே தக்க நேரத்தில் எமர்ஜென்சி பிரேக் போட்டு ரயிலை நிறுத்தினார். அதற்குள் ரயில் நிலையத்தில் நின்ற ரயில்வே பாதுகாப்புப் படையினர் ஓடிவந்து ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த நபரை மீட்டு அழைத்துச் சென்றனர். உரிய நேரத்தில் ரயிலை பிரேக் போட்டு நிறுத்தி தற்கொலை செய்ய முயன்றவரின் உயிரைக் காப்பாற்றிய மோட்டார்மேனை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி

அதோடு நடந்த சம்பவங்கள் அனைத்தும் ரயில் நிலையத்திலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கின்றன. அந்த வீடியோ காட்சிகளை ரயில்வே அமைச்சகம் சமூக வலைதளத்தில் வெளியிட்டு மோட்டார்மேனைப் பாராட்டியிருக்கிறது. சமூக வலைதளத்தில் மோட்டார்மேனை ஏராளமானோர் தொடர்ந்து பாராட்டி கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர். மும்பையில் தினமும் புறநகர் ரயில்களில் அடிபட்டு 10 பேர் வரை உயிரிழக்கின்றனர். அவர்களில் பலர் ரயில் தண்டவாளத்தைல் கடந்து செல்லும்போதும், ரயில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யும்போதும் ரயிலில் அடிபட்டு உயிரிழக்கின்றனர். இந்த உயிரிழப்புகளைத் தடுக்க ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதற்காக மும்பை ரயில் நிலையங்களில் தேவையான அளவு நடைமேம்பாலம் கட்டப்பட்டுவருவதோடு நகரும் படிக்கட்டுகளும் தேவையான அளவு அமைக்கப்பட்டுவருகின்றன.

Also Read: ``அந்த 8 பேருக்கும் தண்டனை கொடுக்கணும்..." - வீடியோ வெளியிட்டுத் தற்கொலை செய்த கிராம உதவியாளர்!



from தேசிய செய்திகள் 

Post a Comment

0 Comments