உ.பி: ``பாஜக-வுக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டன..." - அகிலேஷ் யாதவ் சாடல்!

வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் தொடங்குகிறது. இதனால் அங்கு அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவிலேயே அதிக சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேச மாநிலம் இருப்பதால், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பா.ஜ.க-வும், ஆட்சியைப் பிடிக்க சமாஜ்வாடி கட்சியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், அங்கு கடந்த சில தினங்களாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பா.ஜ.வு-க்காக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று முன் தினம் கூட தேர்தல் பிரசாரத்தில் பேசிய அமித்ஷா, `உத்தரப்பிரதேச தேர்தல்தான் இந்தியாவின் எதிர்காலத்தையே தீர்மானிக்கக் கூடிய தேர்தலாக இருக்கும். உத்தரப்பிரதேசம் வளர்ச்சியடையவில்லை என்றால் மொத்த இந்தியாவும் பின்தங்கும்' என்று கூறியிருந்தார்.

அமித் ஷா

இந்த நிலையில், நேற்று தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ``பா.ஜ.க, விவசாயிகளை மதிக்கவே இல்லை, அவர்களைப் பயங்கரவாதிகள் என்றது, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதில் பலர் இறந்தும் போனார்கள். விவசாயிகள் போராட்டம் குறித்த பா.ஜ.க-வின் பதில்களும் அவர்களைக் கோபமடையவே செய்தது, அதற்கு பதிலளிக்கும் விதமாக விவசாயிகள் இந்த முறை பா.ஜ.க-வுக்கான கதவுகளை அடைத்துவிட்டனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்" என்றார்.

Also Read: உத்தரப்பிரதேசம்: ``அகிலேஷ் யாதவ் ஜின்னாவின் ஆதரவாளர்!” -பாஜக கடும் விமர்சனம்



from தேசிய செய்திகள் https://bit.ly/3s3xnVE

Post a Comment

0 Comments