ஆனைமலை அடுத்துள்ள சேத்துமடையிலிருந்து 4 கி.மீ., தொலைவில் பழைய சர்க்கார்பதி கிராமமும், அடர்ந்த வனப்பகுதியில் மின் உற்பத்தி நிலையம் அருகே புதிய சர்க்கார்பதி பழங்குடியின கிராமமும் அமைந்துள்ளன. பழைய சர்க்கார்பதி கிராமத்தில் பழங்குடியின இனத்தின் மலசர் பிரிவை சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குழந்தைகள் கல்வி பயில இப்பகுதியில் அரசு ஆரம்பப் பள்ளி உள்ளது. அதில் 60 மாணவர்களுக்கு பாடம் கற்றுத்தர, இரண்டு ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்.

ஆரம்பப் பள்ளி மாணவர்களை தவிர்த்து, நடுநிலை மற்றும் உயர்நிலை கல்வி படிக்க விரும்பும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள், சேத்துமடை கிராமத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. அதற்கு போதுமான பேருந்து வசதி கிடையாது. சேத்துமடையிலிருந்து புதிய சர்க்கார்பதி கிராமத்துக்கு 34 ஏ என்னும் வழித்தடத்தில் ஓர் அரசு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. அதுவும் பழைய சர்க்கார்பதி கிராமத்துக்குள் வருவதில்லை. பழைய சர்க்கார்பதி பிரிவிலேயே பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றனர். அங்கிருந்த சுமார் 4 கி.மீ நடந்து கிராமத்துக்கு செல்ல வேண்டி உள்ளது. ஆனாலும் படிக்கும் ஆர்வத்தில், மாணவர்கள் நடந்தே செல்கின்றனர். பலர் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் சரக்கு வாகனங்களில் பயணம் செய்கின்றனர். பள்ளி செல்லும் பிள்ளைகள் பத்திரமாக வீடு திரும்பும் வரை, பெற்றோர் அச்சத்துடன்தான் காத்திருக்க வேண்டியதுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xfWsPi